ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், நவம்பர் - டிசம்பர் பருவத் தேர்வுகளில் நிரந்தர மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையேயும், மாணவர்களிடையேயும் எழுந்துள்ளது.
அதாவது பருவத் தேர்வை முன்கூட்டியே அக்டோபரில் முடித்து விட வேண்டும் அல்லது டிசம்பருக்கு மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்கு பருவ மழை நவம்பரில் உச்ச அளவாக உள்ளது. அதே நேரம், பல்கலைக்கழகங்களின் முதல் பருவத் தேர்வுகளும் இந்த நவம்பரில் தொடங்கி, டிசம்பர் முதல் வாரத்தில் முடியும் வகையில் நடத்தப்படுகின்றன.
பருவ மழை பாதிப்புகள் அதிகரிக்கும்போது, தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
முந்தைய ஆண்டுகளில், மழையால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், அண்ணா பல்கலைக்கழகமோ விடாது மழை பெய்தாலும் பருவத் தேர்வுகளை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடத்தி வந்தது.
இந்த நிலையில், நிகழாண்டிலும் வழக்கம்போல் நவம்பரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அது நவம்பர் 8-ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் பலத்த மழை சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெய்தது.
பிரதான சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் மழை நீர் தேங்கி நின்றது. நவம்பர் 24-ஆம் தேதி இரவு வரை மழை இருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழகமும் நவம்பர் 12 முதல் 28-ஆம் தேதி வரையிலான அனைத்து இணைப்புக் கல்லூரிகளுக்குமான தேர்வுகளை ஒத்திவைத்தன.
இந்த நிலையில், இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பருவத் தேர்வை ஒத்திவைப்பது நிர்வாக ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதோடு, மாணவர்களுக்கும் மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே, இதற்கு பல்கலைக்கழகங்கள் நிரந்தர தீர்வைக் காண வேண்டும் என்கின்றனர் பேராசிரியர்கள்.
இதுகுறித்து அரசுக் கல்லூரி பேராசிரியரும், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளருமான சிவராமன் கூறியது:
ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் பருவமழை பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், பல்கலைக்கழக பருவத் தேர்வுகளைத் தொடர்ந்து நவம்பரிலேயே நடத்துவது என்பது சரியான நடைமுறையாக இருக்காது.
தேர்வுகளை ரத்து செய்தாலும், ரத்து செய்யாவிட்டாலும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். தேர்வுக்கென அவர்கள் தயாராகியிருக்கும் நிலையில், இதுபோன்ற பாதிப்புகள் மாணவர்களுக்கு தேர்வுகள் மீதான ஈடுபாட்டையும், கவனத்தையும் குறைக்க வாய்ப்பு உள்ளது. இதுபோல் தேர்வுகளை ஒத்திவைப்பதால், கல்லூரிகளுக்கும் நிர்வாக ரீதியில் பாதிப்பு ஏற்படும்.
எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். பருவத் தேர்வை முன்கூட்டியே அக்டோபரிலோ அல்லது டிசம்பரிலோ நடத்த வேண்டும் என்றார்.
இதே கருத்தை மேலும் சில அரசுக் கல்லூரி முதல்வர்களும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் கூறியது:
கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழையானது நவம்பரில்தான் பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளால் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வந்துள்ளன.
இந்த ஆண்டு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 12-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு மேல் நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் இரண்டு நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இவ்வாறு தேர்வுகளை தொடர்ந்து ஒத்திவைப்பது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, வரும் ஆண்டுகளில் இந்த முதல் பருவத் தேர்வுகளை அக்டோபர் 20-ஆம் தேதிக்குள்ளாக முடிப்பது என சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்தப் பரிந்துரை வரவுள்ள பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டத்தில் வைக்கப்பட்டு ஆலோசனைக்கு உட்படுத்தப்படும். பின்னர் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றார்.
இதுபோல் வரும் ஆண்டுகளில் பருவத் தேர்வில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஜி.வி. உமா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


