ஜெயலலிதா மீண்டும் முதல்வராகாமல் தடுக்க எந்த தியாகமும் செய்வேன்: விஜயகாந்த் சபதம்

ஜெயலலிதா மீண்டும் முதல்வராகாமல் தடுக்க எந்தத் தியாகமும் செய்வேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராகாமல் தடுக்க எந்த தியாகமும் செய்வேன்: விஜயகாந்த் சபதம்
Updated on
2 min read

ஜெயலலிதா மீண்டும் முதல்வராகாமல் தடுக்க எந்தத் தியாகமும் செய்வேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது, மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் பாலம் அமைக்க தமிழக அரசு தட்டிக்கழித்து வந்த நிலையில், மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து ரூ.20 கோடி நிதி பெற்றுத்தந்துள்ளேன். ஆனால் இங்கு பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு தடையில்லாச் சான்று வழங்கினால்தான்

கட்டுமானப் பணிகளை தொடங்க முடியும். சான்று வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இனி எந்தக் காரணத்தை முன்னிட்டு தமிழக அரசு தட்டிக்கழிக்க முடியாது.

கடமையை செய்யத் தவறினால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக முடியாது. மீண்டும் அவர் முதல்வராகாமல் தடுக்க நான் எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறேன்.

அலிபாபாவையும் 40 திருடர்களையும் திரையில்தான் பார்த்து இருக்கிறோம். இன்றைக்கு அவர்கள் எம்எல்ஏக்கள், மந்திரிகள் உருவத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதா அடிக்கடி கோடநாடு சென்றுவிடுகிறார். கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு கோடநாடு ஒருகேடா என்று மக்கள் கேட்கிறார்கள். மறைந்த அண்ணாவும் கேட்கிறார்.

தமிழகம் மின்வெட்டு இல்லா மாநிலமாக இருக்கும் என்று நத்தம் விஸ்வநாதன் கூறினார். ஆனால் உண்மை நிலை அப்படியில்லை. பெயருக்கு ஏற்றார்ப்போல் நத்தை வேகத்தில்தான் அவருடைய நிர்வாகம் இருக்கிறது.

இந்த மாவட்ட அமைச்சர் மோகன் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக என்னிடம் எப்படியெல்லாம் கெஞ்சி கூத்தாடினார் என்று எனக்குத்தான் தெரியும். இப்போது என்னுடைய தொகுதி வளர்ச்சிப் பணிகளில் அவரே முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறார்.

நான் மீண்டும் ரிஷிவந்தியத்தில் வெற்றிபெற்றால் எல்லா முட்டுக்கட்டைகளையும் தகர்த்தெறிவேன். ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை தனித் தாலுக்காக்களாக ஆகும். மணலூர்பேட்டையை கண்டாச்சிபுரம் தாலுக்காவோடு இணைத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுவார்கள். மணலூர்பேட்டையை அருகிலுள்ள திருக்கோவிலூர் தாலுக்காவோடு சேர்த்து இருக்கக் கூடாதா.

கரும்பு விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. இனிக்கும் கரும்புப் பயிர் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் கசப்பாக உள்ளது. இந்த நிலைமாற வேண்டும்.

தென்பெண்ணையாறு உள்பட தமிழக நதிகள் அனைத்திலும் மணல் கொள்ளை அளவுக்கு அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. இதனால் நீராதாரம் அடியோடு பாதித்து விவசாயம் கோமா நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை.

நடிகர் சங்கத் தேர்தலுக்குக் கொடுத்த பாதுகாப்பைக் கூட மக்களுக்கு காவல்துறை கொடுப்பதில்லை. குற்றங்கள் பெருகிவருகிறது. சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாகி உள்ளது.

மக்கள் நலனைத்தவிர வேறு எதையும் நான் சிந்திப்பதில்லை. என் குடும்ப அங்கத்தினர்கள் யார்யார் என்றுகூட நான் சரியாக நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் கட்சிக்கு உழைப்பவர்கள் ஒவ்வொருவரையும் மறவாமல் நினைவில் வைத்துள்ளேன்.

நான் முதலில் விருத்தாசலத்தில் போட்டியிட்டேன். அது சிவன் ஆட்சி செய்யும் ஸ்தலம். அடுத்து ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டேன். இதுவும் சிவன் ஆட்சி செய்யும் ஸ்தலம். இங்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. அது ஆதித்திருவரங்கம்.

ரிஷிவந்தியம், திருவரங்கம் கோயில்களுக்கு தேர் செய்துகொடுக்க அரசிடம் கோரிக்கை வைத்தேன். நிறைவேற்றவில்லை. அடுத்தமுறை இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றால் நிச்சயம் தேர் செய்துகொடுப்பேன்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.3,000 வரை கொடுக்க அதிமுக தயாராக உள்ளது. இதற்குப் பணம் எங்கு இருந்து வருகிறது. திட்டப் பணிகளில் கொள்ளையடித்த மக்கள் வரிப் பணத்தை வைத்து இப்படி ஓட்டுகளை விலைக்கு வாங்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

ஏமாற்றுபவர்களாக அதிமுகவினர் இருக்கிறார்கள். ஏமாறுபவர்களாக ஏழை ஜாதியினர் இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றவேண்டும்.

என்மீது மட்டும் வெளிச்சம் விழும்படி மேடை அமைத்திருக்கிறார்கள். மக்களாகிய உங்களுக்கும் வெளிச்சம் கிடைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் ஒளிவீச வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com