விவசாயிகள் நலனுக்கு அயராமல் பாடுபடுவோம்: மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் நலனுக்கு அயராமல் பாடுபடுவோம் என விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே துரிஞ்சிப்பட்டில் இன்று நடைபெற்ற நமக்குநாமே விடியல் மீட்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Updated on
1 min read

விவசாயிகள் நலனுக்கு அயராமல் பாடுபடுவோம் என விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே துரிஞ்சிப்பட்டில் இன்று நடைபெற்ற நமக்குநாமே விடியல் மீட்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விவசாயிகள் குறைகேட்பு மற்றும் கலந்துரையாடலில் பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது, கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் தர மறுக்கிறது. விவசாயக் கூலித்தொழில் செய்பவர்களுக்கு மாதத்தில் பத்து நாள்கள்கூட வேலைவாய்ப்புக் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்து வருகிறது. இந்தநிலை மாற்றப்பட வேண்டும்.

திமுக ஆட்சியில்தான், விவசாயிகள் நலன்கருதி, 1989 ஆம் ஆண்டு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி தமிழக மக்களின் பசிப் பிணியைப் போக்கினோம். இத்துடன் விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடனையும் கருணாநிதி தள்ளுபடி செய்தார்.

மேலும் தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்தையும் அவர் செய்து முடித்ததுடன், சொல்லாத பல நலத்திட்டங்களையும் நிறைவேற்றினார். அனைத்துத்தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் தீட்டி அவர் செயல்படுத்தினார்.

ஆனால், இப்போதைய அதிமுக ஆட்சியில் யாருக்கும் நல்லதே நடக்கவில்லை. அனைத்துத் தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் நிம்மதியாக ஓய்வெடுக்கிறார்.

எனவே, மக்களைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிரந்தர ஓய்வு கொடுக்கவேண்டும்.

நீங்கள் எங்கள் மீது எவ்வளவு நம்பிக்கையோடு திரண்டு வந்து குறைகள் தெரிவித்தீர்களோ, அந்த நம்பிக்கையுடன் அமோக ஆதரவு அளித்து, திமுகவை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினால், உங்கள் குறைகள் அனைத்தையும் முற்றிலும் தீர்க்க அல்லும்பகலும் அயராது பாடுபடுவோம் என்றார்.

முன்னதாக, சங்கராபுரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வேலையில்லா இளைஞர்கள், செம்மர கடத்தலில் கைதானவர்கள் குடும்பத்தினர்கள், பகண்டை கூட்டுச்சாலையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்கள், மாடாம்பூண்டியில் நரிக்குறவர்கள், தோப்புச்சேரியில் விவசாயிகளை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார்.

பின்னர், திருக்கோவிலூரில் மதிய உணவு வேளைக்குப் பின் கிறிஸ்தவ பாதிரியார்கள், கண்டாச்சிபுரத்தில் கைத்தறி நெசவார்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com