புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641

வேடந்தாங்கலுக்கு 33,895 பறவைகள் வருகை புரிந்துள்ளன. இவை 8 ஆயிரம் குஞ்சுகளைப் பொறித்துள்ளன.

News image
Updated On :4 ஏப்ரல் 2016, 9:39 pm

வேடந்தாங்கலுக்கு 33,895 பறவைகள் வருகை புரிந்துள்ளன. இவை 8 ஆயிரம் குஞ்சுகளைப் பொறித்துள்ளன. இதன்படி, மொத்தம் 82,641 பறவைகள் சொந்த ஊர்களுக்கும், நாடுகளுக்கும் ஜூன் மாதத்தில் திரும்பவுள்ளன.
 காஞ்சிபுரம் அருகேயுள்ள வேடந்தாங்கலில் 73 ஏக்கர் பரப்பளவில் 1962-ஆம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயம் செயல்பட்டுவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் வரை பறவைகள் வருவது வழக்கம். இந்தாண்டு கூடுதலாக, மார்ச் மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி 33,895 பறவைகள் வந்துள்ளன.
 என்னென்ன பறவைகள்? நிகழாண்டு ஊசிவால் வாத்து, புள்ளிமூக்கு வாத்து, வக்கா, குருட்டுக் கொக்கு, நத்தைக் கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், நீர்காகம், சாம்பல் நாரை, பாம்பு தாரா, தட்டை வாயன், நாமக் கோழி, பவள உள்ளான், மைனா, பச்சைக் கிளி, மீன் கொத்தி, ஆட்டி குருவி, உன்னிக் கொக்கு, முக்குலைப்பான், கரண்டிவாயன் உள்ளிட்ட பறவை ரகங்கள் வருகை தந்துள்ளன.
 இதற்கு முன் அதிகபட்சமாக 2013-14-ஆம் ஆண்டு சீசனில் 32 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. பின்னர், 2014-15ஆம் ஆண்டு மழை பொய்த்ததால் வேடந்தாங்கல் ஏரி வற்றிப்போனது. இதனால், 1,531 பறவைகளே வந்து தங்கின.
 அதிகப் பறவை வந்ததற்கு என்ன காரணம்? 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வேடந்தாங்கலுக்கு குறைந்த அளவிலான பறவைகளே வந்தன. மேலும் வரட்சியின் காரணமாக சரணாலயம் மூடப்பட்டது. இந்தாண்டு நவம்பர் வரையிலும் வறட்சியின் காரணமாக சரணலாயம் மூடப்பட்டிருந்தது.
 ஆனால், டிசம்பர் மாதம் முதல் நல்ல மழை பெய்ய தொடங்கி வேடந்தாங்கல் ஏரி நிரம்ப தொடங்கியது. இதனையடுத்து வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக பல்வேறு திசைகளில் இருந்து வரத் தொடங்கின. இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பறவைகள் சரணாலயத்துக்கு வரத்தொடங்கின. மேலும், மழை காரணமாக வேடந்தாங்கலில் விவசாயமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் பறவைகளுக்கான உணவு ஆதாரமும் பெருகியுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மேலும் வனத் துறையின் சார்பில் மீன்கள் வளர்க்கப்பட்டு வேடந்தாங்கல் ஏரிகளில் பறவைகள் உணவுக்காக தொடர்ந்து விடப்பட்டன. மேலும், அப்பகுதிகளில் எங்கும் நீர் தேங்காமல் அனைத்தும் ஏரிகளில் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 பறவைகள் எப்போது விடைபெறும்? பறவைகள் குஞ்சுகளைப் பொறித்து, பராமரித்து, உணவளித்து வருகின்றன. குஞ்சுகள் பறக்கும் திறனை பெற்றவுடன் ஜூன் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்லத் தொடங்கிவிடும். ஜூலை மாதம் இறுதியில் வெளிநாட்டுப் பறவைகள் ஒன்றுகூட இருக்காது.
 இதன்படி, மொத்தம் 82,641 பறவைகள் சொந்த ஊர்களுக்கும், நாடுகளுக்கும் திரும்பவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.