'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான்' - அறிக்கை வெளியிட்ட எம்.பி.தம்பித்துரை!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான் என்று அதிமுக எம்.பியும்  நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான்' - அறிக்கை வெளியிட்ட எம்.பி.தம்பித்துரை!

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான் என்று அதிமுக எம்.பியும்  நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உடல்நலக் குறைவால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் நேற்று சசிகலாவை நேரில் சந்தித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்க வலியுறுத்தினர். 3-வது நாளாக இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்றும் முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள் போயஸ் தோட்டத்திற்கு சென்று உள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான் என்று அதிமுக எம்.பி. தம்பித்துரை அறிக்கை விடுத்து உள்ளார்.  இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சின்னம்மாவே அம்மாவின் அரசியல் வாரிசு என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், தமிழ் மக்களும் நன்கு அறிந்த ஒன்றாகும். என்னைப் போன்ற கழக தொண்டர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று சின்னம்மா, கழகத்தின் தலைமை பொறுப்பினை ஏற்றுக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும், தமிழகத்தையும் காக்க வேண்டுமாய் நன்றிப் பெருக்கோடும், நல்லெண்ண வாழ்த்துக்களோடும் கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்கவேண்டும் என அம்மா பேரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com