புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள்!

முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு- முண்டந்துறை வனச் சரணாலயங்களில் விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க

News image
Updated On :8 பிப்ரவரி 2016, 8:07 pm

முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு- முண்டந்துறை வனச் சரணாலயங்களில் விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க விரைவில் மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
 வனச் சரணாலயங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், சில நேரங்களில் விலங்குகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. இதைத் தடுப்பதற்காகவும், குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகவும் வேட்டைத் தடுப்பு மோப்ப நாய்களுக்கு மத்திய பிரதேசம் மாநிலம், குவாலியரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 இந்த முயற்சியை வன விலங்கு கடத்தல் தடுப்புப் பிரிவும்- உலக வன விலங்கு நிதியமும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
 இந்தியா முழுவதும் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க 44 மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி போபால், குவாலியரில் உள்ள சிறப்பு காவல் படையில் உள்ள நாய்கள் பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.
 கடந்த ஆண்டு முதல்முறையாக ஷனி என்னும் மோப்ப நாய் வேட்டைத் தடுப்புப் பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வனச் சரணலாயத்துக்கு அனுப்பப்பட்டு, சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.
 வன விலங்கு வேட்டையைத் தடுக்க பயிற்றுவிக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள் அனைத்தும் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்தவையாகும். புலித் தோல், சிறுத்தை எலும்புகள், கரடி வேட்டை, கஞ்சா கடத்தல் ஆகியவற்றைக் கண்டறிய மோப்ப நாய்கள் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 இதுபோன்ற மோப்ப நாய்கள் வட இந்தியாவில் பல்வேறு வனக் குற்றங்களைக் கண்டறிய உதவியுள்ளதால், தமிழகக் காடுகளிலும் குற்றங்களைத் தடுக்க இவை பயன்படுத்தப்படவுள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 இதுகுறித்து வன விலங்குகள் வேட்டை, கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவர் சேகர் குமார் நீரஜ்
 கூறியதாவது:
 வன விலங்குகள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு மோப்ப நாய்கள் பெரும் உதவியாக இருக்கும் என்பதால், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்களைத் தேர்ந்தெடுத்து அவை 3 முதல் 6 மாதக் குட்டியாக இருக்கும்போதே பயிற்சி அளிக்கப்படுகிறது.
 தமிழக வனத் துறையிடமிருந்து இப்போது சத்தியமங்லம், முதுமலை, ஆனைமலை ஆகிய வனச் சரணாலயங்களில் வேட்டைத் தடுப்புப் பணிக்காக மோப்ப நாய்கள் தேவை எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அவற்றுக்கான பயிற்சி குவாலியரில் நடைபெற்று வருகிறது. பயிற்சி முடிந்த பிறகு, இந்த மோப்ப நாய்கள் தமிழகத்துக்கு அனுப்பப்படும். மேலும், களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்கு மோப்ப நாய்கள் தேவை என அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு முன்பு 2013-ஆம் ஆண்டில் பயிற்சியளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் சுமார் 25 கடத்தல் குற்றங்களைக் கண்டறிய உதவியுள்ளன.
 தமிழகத்தைப் பொருத்தவரை, வன விலங்குகள் கடத்தல் குறித்து முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை. ஆனால், யானைத் தந்தங்கள், புலி, சிறுத்தையின் உடல் பாகங்களைக் கண்டறிவது அதிகமாகியிருக்கிறது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.