டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சென்னை பல்கலை.யில் விதிகளை மீறி எல்.எல்.டி பட்டம்: பேராசிரியர்கள் புகார் 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி எல்.எல்.டி. (சட்டத்தில் உயர் ஆராய்ச்சி பட்டம்) வழங்க அதிகாரிகள் முயற்சிப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

Updated On :24 பிப்ரவரி 2016, 9:54 pm

சென்னைப் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி எல்.எல்.டி. (சட்டத்தில் உயர் ஆராய்ச்சி பட்டம்) வழங்க அதிகாரிகள் முயற்சிப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
 ஏற்கெனவே, நவம்பர் மாத ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இந்தப் பரிந்துரை ரத்து செய்யப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்புகளையும் மீறி வியாழக்கிழமை நடைபெற உள்ள ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இதே பரிந்துரை மீண்டும் கொண்டுவரப்படுவது பேராசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 வழக்கமாக, ஒருவர் பிஹெச்.டி. (ஆராய்ச்சிப் பட்டம்) முடித்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் நிறைவு செய்த பின்னரே, டி.லிட்., டி.எஸ்சி. அல்லது எல்.எல்.டி. என்ற உயர் ஆராய்ச்சிப் பட்டத்தைப் பெற விண்ணப்பிக்க முடியும்.
 இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியது: பல்கலைக்கழக விதியின்படி, ஒருவர் பி.ஹெச்டி. பட்டம் முடித்து 10 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதோடு, அதே துறையில் அவர் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் டி.லிட். ஆராய்ச்சிப் பட்டத்தைப் பெறும் தகுதியை அவர் பெற முடியும். இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு கடந்த 2015 நவம்பரில் பி.ஹெச்டி. பட்டம் பெற்ற ஒருவருக்கு, எல்.எல்.டி. உயர் ஆராய்ச்சிப் பட்டம் கொடுப்பதற்கான பரிந்துரை நவம்பர் மாத ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது.
 அப்போது அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்தப் பரிந்துரை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற உள்ள ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில், இதே பரிந்துரை 19-ஆவது தீர்மானமாக மீண்டும் ஒப்புதலுக்காகக் கொண்டுவரப்படுகிறது. இது, பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அனைத்துப் பேராசிரியர்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 பல பேராசிரியர்கள் பி.ஹெச்டி. பட்டம் முடித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில், பேராசிரியராக மட்டுமின்றி தொடர் ஆராய்ச்சியிலும் ஈடுபடாத அந்த நபருக்கு பிஹெச்.டி. முடித்த இரண்டு மாதங்களில் எல்.எல்.டி. ஆராய்ச்சிப் பட்டம் கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம் எனவும் பேராசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 விதிமீறி 21 ஆண்டுகளுக்குப் பிறகு பி.ஹெச்டி. பட்டம்: அதுபோல, பல்கலைக்கழக விதியின்படி, பி.ஹெச்டி. பட்டத்தில் சேரும் ஒருவர் அதிகபட்சம் 6 ஆண்டுகளில் கட்டுரைகளைச் (தீஸிஸ்) சமர்ப்பித்து ஆராய்ச்சிப் படிப்பை முழுமையாக முடித்தாக வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் அவர் எப்போதுமே பிஹெச்.டி. பட்டம் பெற முடியாது.
 இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1995-இல் பிஹெச்.டி. சேர்ந்த ஒருவருக்கு 21 ஆண்டுகள் கழித்து இப்போது பி.ஹெச்டி. பட்டம் வழங்கவும் முயற்சி எடுக்கப்படுகிறது. இதற்கான பரிந்துரையும் 18-ஆவது தீர்மானமாக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஒப்புதலுக்காகக் கொண்டுவரப்படுகிறது எனவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.