கன்னியாகுமரியிலிருந்து காரைக்குடி வரையிலான நகரங்களை இணைக்கும் கிழக்குக் கடற்கரை ரயில் பாதைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கிழக்குக் கடற்கரை ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கன்னியாகுமரி, கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகனேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம், காரைக்குடி வரை புதிய ரயில் நிலையங்கள் உருவாகும்.
தற்போது கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் பயணிக்க 136 கி.மீ. சுற்றுப் பாதையில் செல்ல வேண்டியுள்ளது. கிழக்கு ரயில் பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கன்னியாகுமரி- திருச்செந்தூர் இடையேயான ரயில் பயணத் தொலைவு 70 கி.மீ. ஆகக் குறையும்.
மேலும், மத்திய அரசால் செயல்படுத்தப்படவிருக்கும் குளச்சல் துறைமுகத்துக்கும், தூத்துக்குடி துறைமுகத்துக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்படும்.
கன்னியாகுமரி முதல் காரைக்குடி வரை புதிய ரயில் நிலையங்களும் உருவாகும். சரக்குகள் ஏற்றுமதியிலும் வளர்ச்சி ஏற்படும். அதோடு, சுற்றுலாத் துறையிலும் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை எட்டும்.
பின்தங்கியுள்ள தமிழகம்: ரயில்வே வளர்ச்சித் திட்டங்களைப் பொருத்தவரை தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. தென் தமிழகத்தில் அதிகளவில் ஆன்மிகத் தலங்களும், சுற்றுலாத் தளங்களும் உள்ளன. மேலும், தென் மாவட்ட மக்கள் வேலை, கல்வி, வியாபாரம் தொடர்பாக சென்னைக்கு அதிகளவில் வந்து செல்வதாலும், பிற மாநிலங்களில் இருந்தும், பிற நாடுகளிலிருந்தும் தென் தமிழகத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதாலும் தொலைவிடங்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதைவிட ரயில்களில் செல்வதையே அதிகம் விரும்புகின்றனர்.
எனவே, அதிக அளவில் ரயில்களை இயக்குவதற்கு இரட்டை இரயில் பாதை, புதிய ரயில் பாதை, அகல ரயில் பாதை, மூன்றாவது ரயில் வழித்தடம் போன்றவை முக்கியமானவை. கடந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 2,157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதோடு, சில புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
இவற்றில், மதுரை- கன்னியாகுமரி, மணியாச்சி- தூத்துக்குடி, கன்னியாகுமரி- திருவனந்தபுரம், தஞ்சாவூர்- பொன்மலை, விழுப்புரம்- திண்டுக்கல் போன்ற இரட்டை வழிப் பாதைத் திட்டங்களும், மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி, சென்னை- மாமல்லபுரம்- கடலூர் துறைமுகம், கூடுவாஞ்சேரி- ஆவடி போன்ற புதிய ரயில் பாதைகளும், செங்கோட்டை- புனலூர், பொள்ளாச்சி- போத்தனூர், மதுரை- போடிநாயக்கனூர் போன்ற அகல ரயில் பாதைத் திட்டங்களும் முக்கியமானவை.
மேலும், தாம்பரம்- செங்கல்பட்டு மூன்றாவது வழித்தடம் திட்டத்தையும் ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.
இதுகுறித்து தமிழ்நாடு தென் மாவட்ட ரயில் பயணியர் சங்கப் பொதுச் செயலர் சூசைராஜ் கூறியதாவது:
ரயில்வே அமைச்சகம் நிறைவேற்ற முன்வந்த திட்டங்களை விரைவாக நிறைவேற்ற தமிழக அரசு இணைந்து செயல்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு ரயில்வே கட்டுமானக் கழகம் என்ற நிறுவனத்தை அமைத்து செயல்பட்டால் தமிழக வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும்.
அதோடு, ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, வாரம் ஒரு முறை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர ரயிலான எழும்பூர்- நாகர்கோவில் ரயிலை தினமும் இயக்க வேண்டும். திருவனந்தபுரம் கொச்சுவேலியிலிருந்து வேளாங்கண்ணிக்கு மார்த்தாண்டம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். இவை அனைத்தும் நிறைவேறினால் மட்டுமே தென் மாவட்ட மக்களுக்கான ரயில் சேவை முழுமையாக நிறைவடையும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


