தேர்தல் நடத்தை விதிமீறல்: பண்ருட்டி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்
தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.


நெய்வேலி: தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.
கடந்த 2011- ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் சபா.ராஜேந்திரன் போட்டியிட்டார்.
அவரை ஆதரித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், பாமக தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் எம்எல்ஏ தி.வேல்முருகன், முன்னாள் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, திரைப்பட நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். இதில், அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் பிரசாரம் செய்தது உள்ளிட்ட காரணங்கள் தொடர்பாக, பண்ருட்டி போலீஸாரால் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்சு.திருமாவளவன், பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜூலை 18-ஆம் தேதி ஆஜராகி குற்ற நகலைப் பெற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு குற்றவியல் நடுவர் சரவணபாபு ஒத்திவைத்தார்.
நீதிமன்ற வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது.
திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரனை ஆதரித்து, பண்ருட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்த போது தேர்தல் நடைத்தை விதிமீறில் நடந்ததாகக் காவல்துறை என் மீது பொய் வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகி பொய் வழக்கு என்றும், நான் குற்றவாளி அல்ல என்றும் தெரிவித்துள்ளேன். மீண்டும் ஜூலை 22-ம் தேதி ஆஜராகும்படி ஆணை பிறப்பித்துள்ளர்.
தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் செய்யும் போது நடத்தை விதி மீறல்களை மதித்து நடந்து வந்துள்ளேன். சில இடத்தில் கூட்டம் கலைவதில் சில நிமிடமாவது தவிர்க்க முடியாதது. அதுபோல் பண்ருட்டியை நான் கடக்கும் போது பெரும் திரள் கூட்டம் இருந்ததால், தேர்தல் நடத்தை விதி மீறல் நடந்ததாக காவல்துறையினர் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்.
ஆக.1-ம் தேதி முதல் 10-ம் தேதிவரையில் வடமாவட்டமான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் வேர்களை தேடி பயணத்தை தொடங்க உள்ளோம். கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயுத்தமாவது குறித்து இப்பயணத்தில் திட்டமிடப்படும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கேடு அடைந்துள்ளது. காவல் துறை இயங்குகிறதா? இல்லையா? என்ற நிலையில் தமிழக அரசின் செயல்பாடு உள்ளது. காவல்துறை சக்தி ஆளுங்கட்சிக்கு சேவை செய்வதிலேயே செலவிடப்படுகிறது.
இதனால் கொலை, கொள்ளை, வழிப்பறி, சாதிய வன்கொடுமை, ஆணவக்கொலை தமிழகத்தில் தலை விறித்தாடுகிறது. சென்னை உள்ளிட்ட பெரு நகரில் கஞ்சா சாக்லைட் விற்பனை நடப்பது வேதனைக்குறியது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முழு கவனம் செலுத்த வேண்டும். குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய அமைப்பாக செயல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரிலும், தபால் நிலையத்தில் கங்கை நீர் விற்பனை செய்வது மூலம் காவித்துவாவை புகுத்தி வருகிறது.
இந்த சூழலில், மதவாதத்தை எதிர்க்கும் ஜனநாயகக் கட்சிகளை ஒங்கிணைத்து,காவி மயப்படுத்தல் முயற்சியை முறியடிப்பது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், கங்கை நதியில் திருவள்ளுவர் சிலையை வைக்க அங்குள்ளவர்கள் எதிர்பு தெரிவித்துள்ளனர். அதன் பின் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது திருவள்ளுவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழினத்திற்கே ஏற்பட்ட அவமதிப்பு. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
சுவாதி கொலை வழக்கில் ஏராளமான சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன. இவை எல்லாம் ஆதார பூர்வமான தகவல் என்று கூறமுடியாவிட்டாலும் கூட, ஒன்றையும் புறம் தள்ள முடியாததாக உள்ளன.
தற்போது பேசப்படுவது, சுவாதி கொலை ஒருதலை காதல் கொலை அல்ல. அது ஜாதி ஆணவக்கொலை. மதம்விட்டு மதம் திருமணம் செய்வதற்கான முயற்சி நடந்த போது இந்த கொலை நடத்ததாக கூறப்படுகிறது.
காவல் துறையின் நடவடிக்கையில் முன்னுக்கு பின் முறனான போக்குகள் உள்ளன. சுவாதியின் முகநூல் விபரங்கள் இன்னும் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்களை தருகின்றன. ராம்குமார் முகநூலில் சுவாதியை பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது மேலும் அதிர்ச்சியை தருகிறது. முகநூல் மூலம் தான் சுவாதியிடம் ராம்குமாருக்கு நட்பு ஏற்பட்டது. அதுதான் ஒருதலை காதலாக மாறியது. அதன் அடிப்படையில் தான் ராம்குமார் சென்னையில் தங்கினார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று விவாதிக்கப்படுகிறது.
எனவே உண்மையை மூடி மறைப்பது, நீதிக்கு எதிராக செயல்படுவது, யாரை காப்பாற்ற என்ற கேள்வி எழுகிறது. சுவாதி முகநூல், தொலைபேசி ஆகியவை மூலம் கண்டறிந்தத் தகவல்களை காவல்துறை வெளியிட மறுப்பது ஏன். மாலீக் பிலால் என்பவரோடு சுவாதிக்கு ஏற்பட்ட நட்பு எத்தகையது. காவல்துறை புலனாய்வு செய்வதற்கு முன்னரே மற்றவர்கள் மாலீக் பிலால் பெயரை பதிவு செய்தது எந்த அடிப்படையில்.
சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மாலீக் பிலால் வந்தது எப்படி, அவருக்கு யார் தகவல் அளித்தது என பல கேள்விகள் எழுகின்றன. இதை காவல்துறை மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. எனவே தான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
செங்கத்தில் பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் நடத்திய காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி இடமாற்றம் செய்வது என்பது தண்டனையாகாது.
மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமை கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது என மாவட்ட செயலர் மற்றும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
ஜூலை 19-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மதிமுக தலைமை இடமான தாயகத்தில் மாலை மக்கள் நல கூட்டணியினர் கூடுகின்றோம். ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில் கூடி நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் குறித்தும், எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளோம்.
தமிழ்நாடு மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, பாலாறு அணை உயர்துவது, காவரி, முல்லை பெரியாறு என, தமிழகத்தை சூழந்துள்ள இந்த கேடுகளுக்கெல்லாம் தீர்வு காணமுடியாமல் காலம் தாழ்த்தி தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழர்களுக்கு எதிராக உள்ளதாக உணர முடிகிறது.
எனவே தமிழக அரசு இப்படிப்பட்ட பிரச்சனைகள் குறித்தும், நம்மை சுற்றியுள்ள அண்டை மாநில உறவுகள் குறித்தும், தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக விவாதிப்பதற்கு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வதாக தொல்.திருமாவளவன் கூறினார்.
மேலும், இதே வழக்கு தொடர்பாக நெய்வேலி, எம்.எல்.ஏ., சபா.ராஜேந்திரன், கடலூர் முன்னாள் எம்.பி., கே.எஸ்.அழகிரி ஆகியோரும் குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜராகினர். வரும் 25-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகையை முன்னிட்டு பண்ருட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...