மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளைத் தொடர்ந்து, கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும் கட்டணக் கொள்ளையை கல்லூரி நிர்வாகங்கள் தொடங்கிவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.30 ஆயிரம் வரையில் நன்கொடை வாங்கி வந்த கல்லூரிகள் இப்போது அதிகபட்சமாக ரூ. 2.5 லட்சம் வரையில் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டு முதல் அதிகரித்துவருகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சுயநிதிக் கல்லூரிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, பி.காம்., பி.காம். (கணினி அறிவியல்), பிசிஏ, பி.எஸ்சி. போன்ற படிப்புகளுக்கே கூடுதலாக நன்கொடை வசூலிக்கப்படுகிறது. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பி.காம். படிப்புக்கு ரூ. 2.5 லட்சம் நிர்ணயித்துள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுபோல, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பிரபல தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பி.காம்., பி.சி.ஏ. இடங்களுக்கு மிக அதிக அளவில் நன்கொடை வசூலிப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும்!: இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க (ஏயுடி) முன்னாள் நிர்வாகி பாண்டியன் கூறியதாவது:-
பட்டப் படிப்புகளுக்கு வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை 1997-ஆம் ஆண்டு நிர்ணயம் செய்து அரசாணையாக (அரசாணை எண்.265) தமிழக அரசு பிறப்பித்தது. அதன் பிறகு 19 ஆண்டுகள் கடந்த விட்டநிலையில் கட்டணம் மாற்றியமைக்கப்படவே இல்லை.
இந்த அரசாணையின்படி, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பி.ஏ. போன்ற கலை படிப்புகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.500-ம், இளநிலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு ரூ 750-ம், வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடிய பி.காம்., உயிரி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு ரூ. 1000-ம் ஆண்டு கல்விக் கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
இந்தக் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவின் கீழ் வழங்கப்படும் பி.ஏ. போன்ற கலை படிப்புகளுக்கு ரூ. 1,350-ம், இளநிலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு ரூ, 2,850-ம், வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடிய இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு ரூ, 4,750-ம் ஆண்டு கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
இதற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகளுக்கு 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்க 1996-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் வழி உள்ளது.
இந்த அரசாணையை அரசு உதவி பெறும் கல்லூரிகளும், சுயநிதி கல்லூரிகளும் பின்பற்றுவதில்லை. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பிரபல கல்லூரி ஒன்று அதன் இணையதளத்திலேயே இளநிலை பட்டப் படிப்புக்கான செமஸ்டர் கட்டணமாக ரூ. 17,000-மும், நிர்வாகக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும் என வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது. மறைமுகமாக பல்வேறு திட்டங்களின் கீழ் பல ஆயிரங்கள் வசூலிக்கப்படுகிறது.
கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்படுமா?: சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பி.எட். கல்லூரிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே சுயநிதி கல்லூரிகள் வசூலிக்க வேண்டும்.
ஆனால், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இதுபோன்று கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. இதனால், தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் வசூலித்து வருவதாகத் தொடர் புகார்கள் எழுகின்றன.
இதுதொடர்பாக யாரிடம் புகார் தெரிவிப்பது என்ற தெளிவான நடைமுறை இல்லை. இதை முறைப்படுத்தும் வகையில் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கட்டண நிர்ணயக் குழு மூலம் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் படிப்புகள் குறித்த விவர அட்டையில் கல்விக் கட்டண விவரத்தையும் தெரியப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
என்ன ஆனது உயர் நீதிமன்ற உத்தரவு?
பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சுயநிதி கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2015 ஆகஸ்ட் 21-இல் பிறப்பித்த உத்தரவில், "சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்து நிர்ணயம் செய்வதற்கான குழுவை 3 மாத காலத்துக்குள் தமிழக அரசு அமைக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இதுவரை கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கலை-அறிவியல் படிப்பு சேர்க்கை: பொதுக் கலந்தாய்வு முறை வருமா?
மருத்துவம், பொறியியல், பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நடத்தப்படுவதால், வெளிப்படத் தன்மை உறுதி செய்யப்படுகிறது.
ஆனால், கலை, அறிவியல் படிப்பு சேர்க்கையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
தமிழகத்தில் 74 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 37 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 139 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 443 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 693 கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2 லட்சம் இடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கையை, அந்தந்த கல்லூரிகளில் நடக்கும் கலந்தாய்வு மூலமே நடத்திகொள்கின்றன.
இதனால், சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கலை, அறிவியல் படிப்பு சேர்க்கையும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நடத்தப்பட வேண்டும் அல்லது மாநில, மண்டல, மாவட்ட அளவுகளில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் பிரதாபன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


