போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வறுமையின் காரணமாக அபராதம் செலுத்த முடியாத இருவருக்கு தண்டனை காலத்தை குறைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் எஸ்.எட்மண்ட், எம்.ஷிதி ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும், அபராதத் தொகை செலுத்தவில்லை என்றால், மேலும் 6 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தண்டனையை குறைக்கவேண்டும்: இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்மண்ட், ஷிதி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். அதில், ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு ரூ.1 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை. அந்த அபராதத் தொகையை எங்களால் செலுத்த இயலாது. எனவே, அபராதம் செலுத்தாவிட்டால், 6 மாதம் சிறை தண்டனை என்ற தண்டனை காலத்தை குறைக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எஸ்.விமலா வியாழக்கிழமை விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
எப்போதெல்லாம் சுதந்திரம், நீதி ஆகியவைக்கு இடையே வேறுபாடு ஏற்படுகிறதோ, அப்பொதெல்லாம் இரண்டுமே பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து என்று இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞர் எட்மண்ட் பர்க் கூறியுள்ளார்.
அந்தத் தத்துவம் இந்த வழக்குக்கும் பொருந்தும். போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தில், குற்றவாளிக்கு குறைந்தபட்சம் அபராதத் தொகை விதிக்கப்படும்போது, சட்டத்தில் கூறப்பட்டுள்ள அந்த குறைந்தபட்ச அபராதத் தொகையை நீதிமன்றத்தினால் குறைக்க முடியாது.
15 நாள்களாக குறைப்பு: ஆனால், அபராதம் செலுத்தாததற்காக, அனுபவிக்கவேண்டிய சிறை தண்டனையை நீதிமன்றத்தால் குறைக்க முடியும். சாந்திலால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதே கருத்தை வலியுறுத்தி தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்த வழக்குக்கும் பொருந்துமா? என்பதை பார்க்க வேண்டியதுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் இருவரும் 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டனர். ஆனால், வறுமையின் காரணமாக அவர்களால் அபராதத் தொகை தலா ரூ.1 லட்சத்தை செலுத்த முடியவில்லை. இதனால், தண்டனை காலம் முடிந்த பின்னரும், சிறைக்குள் இருக்கவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குடும்பத் தலைவர் சிறையில் உள்ளதால், அவர்களது குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் துயரத்தை அனுபவிக்கின்றனர். எனவே, மனுதாரர்கள் இருவரும் அபராதம் செலுத்தவில்லை என்றால் 6 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை, 15 நாள்கள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று மாற்றி அமைத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.