புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 24 புலிகள் உயிரிழப்பு!

தமிழகத்தில் 2014 முதல் இப்போது வரை மொத்தம் 24 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2016, 5:39 pm

தமிழகத்தில் 2014 முதல் இப்போது வரை மொத்தம் 24 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், இரண்டு புலிகள் ஆள்கொல்லியாக கருதப்பட்டு வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. மேலும், 10 புலிகள் தமிழக வனப்பகுதியில் விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன.

மேலும், 2014 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. சில புலிகள் என்கவுன்ட்டர் சம்பவங்களிலும், வேட்டையாடப்பட்டும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், கடந்தாண்டில் (2015) தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே உயிரிழந்துள்ளன. இந்தப் புலிகள் என்ன காரணத்தால் உயிரிழந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

2016 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி வரை 3 புலிகள் உயிரிழந்துள்ளன. அதில், ஒரு புலி கொடைக்கானலில் விஷம் வைத்து கொல்லப்பட்டது. இன்னொரு புலி நீலகிரியில் அண்மையில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது. தற்போது (சனிக்கிழமை) கூடலூரில் ஆள்கொல்லியாக கருதப்பட்ட புலி அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது.

பொது மக்களை திருப்திபடுத்தவே...: பொதுமக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே வனத் துறை அதிகாரிகள் புலிகளை சுட்டுக் கொல்கின்றனர் என்று சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வேறு சிலர் ஆள்கொல்லி புலிகளை உயிரியியல் பூங்காக்களில் வைத்து பராமரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 3 ஆள்கொல்லி புலிகள் வனத் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா அருகே அட்டபெட்டு, குந்தசப்பை ஆகிய பகுதிகளில் 3 பேரை புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து, அந்தப் புலி சுட்டுக் கொல்லப்பட்டது.

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி கூடலூரில் பெண்ணைக் கொன்ற புலி சுட்டுக் கொல்லப்பட்டது.

பின்பு, இந்தாண்டு சனிக்கிழமை (மார்ச் 19) கூடலூரில் மீண்டும் புலி சுட்டு கொல்லப்பட்டதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரு புலி ஆள்கொல்லியாக இருக்கும்பட்சத்தில் அதை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து பெரும்பாலானவர்களால் முன்வைக்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு வால்பாறை பகுதியில் சுற்றித் திரிந்த ஆள்கொல்லி புலி மயக்க மருந்து செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. பிறகு, இந்தப் புலி வன உயிரியல் காப்பகத்துக்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டது. அந்தப் புலி இயற்கையாகவே மரணம் அடைந்தது.

இது குறித்து சூழலியலாளர் கூறியது: வனத்துறையினரிடம் உயிரோடு பிடிப்பதற்கான போதிய உபகரணங்கள் இல்லை. மயக்க மருந்து ஊசி போட்டு பிடிக்கும் போக்கும் இப்போதெல்லாம் கையாளப்படுவதில்லை. வனப்பகுதிக்குச் செல்லும் வனத்துறையினரிடம் பாதுகாப்பு கவசங்களும் இல்லை. இதனால் தொலைவில் இருந்து புலியை எளிதாக சுட்டுக் கொல்லும் முறை கையாளப்படுகிறது. இதன் மூலம் புலி அச்சத்தில் இருக்கும் பகுதி மக்களையும் திருப்திபடுத்த முடிகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.