தேமுதிக-மக்கள் நலக்கூட்டணிக்கு எதிராக திட்டமிட்டு பொய் பிரசாரம்: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணிக்கு எதிராக திட்டமிட்டு பொய்யான பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக இந்திய....


திருநெல்வேலி: தேமுதிக-மக்கள் நலக்கூட்டணிக்கு எதிராக திட்டமிட்டு பொய்யான பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் இரா. முத்தரசன் குற்றம்சாட்டினார்.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை அளித்த பேட்டி: தேமுதிக மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தேமுதிக மக்கள் நலக்கூட்டணியை கருதுவதால், இந்த கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் அதிமுக மீது திமுகவும், திமுக மீது அதிமுகவும் ஊழல் புகார் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இரு கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இதை இரு கட்சிகளும் மறுக்கவில்லை. இவர்கள் ஆட்சியில் தான் மணல், தாது மணல் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டன.
நேர்மையான அதிகாரிகள் செயல்பட முடியவில்லை. அதிமுக, திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் செயல் இழந்து விட்டது. ஓட்டுநர் பணியிடத்தை நிரப்புவதில் நேர்மையாக செயல்பட முடியாத நிலையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துமாறு கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில்
கூட தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.
இப்போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என முதல்வர் ஜெயலலிதா தெரிவிப்பதை எப்படி ஏற்க முடியும்? அதிமுக, திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளாக பாதி்க்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முன்வராத
முதல்வர் ஜெயலலிதா, இப்போது, விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என கூறுவது வாக்குகளை பெறுவதற்கான பொய் பிரசாரம் ஆகும்.
இத்தேர்தலில் அதிமுக, திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள். தேமுதிக-மக்கள் நலக்கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. கருத்துக்கணிப்பை மீறி தேமுதிக மக்கள் நலக்கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
இக்கூட்டணி தன் எழுச்சி பெற்றுள்ளது. முந்தையை தேர்தல்களை விட இப்போது பணம்பட்டுவாடா அதிகரித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். தேமுதிக மக்கள் நலக்கூட்டணி எதிராக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இக்கூட்டணி தலைவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.
பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். காசிவிஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், பாளையங்கோட்டை மதிமுக வேட்பாளர் கே.எம்.ஏ. நிஜாம்முகைதீன், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...