டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: வழக்கம் போல் வணிகவியல் படிப்பின் மீதே ஆர்வம் அதிகம்

கடந்த ஆண்டுகளைப் போலவே கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிபோரின் எண்ணிக்கை, 2016-17 கல்வியாண்டிலும் அதிகரித்துள்ளது.

Updated On :26 மே 2016, 10:16 pm

கடந்த ஆண்டுகளைப் போலவே கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிபோரின் எண்ணிக்கை, 2016-17 கல்வியாண்டிலும் அதிகரித்துள்ளது.
 இம்முறை விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகம் என்றும், வழக்கம்போல் வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் பல்வேறு கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
 தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டைப்போல, இம்முறை முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
 அதிக மதிப்பெண் பெறும் சிறந்த மாணவர்களையும் கவரும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரசு கல்லூரிகளிலும் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 பெரும்பாலான அரசு கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகமும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் கால அவகாசமும் மே 26-ஆம் தேதியோடு முடிவடைந்தது.
 சில அரசு கல்லூரிகள் மே 27-ஆம் தேதி வரையிலும் அவகாசம் அளித்துள்ளன.
 இந்த நிலையில், வியாழக்கிழமை (மே 26) வரையிலான நிலவரப்படி, கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக விநியோகமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
 பிளஸ் 2 முடித்தாலே பொறியியல் படிப்பில் சேர்வது என்ற நிலை மாறி, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இது 2016-17 கல்வியாண்டிலும் தொடர்கிறது.
 நிகழ் கல்வியாண்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்கின்றனர் கல்லூரி முதல்வர்கள்.
 இதுகுறித்து சென்னை காயிதே மில்லத் கல்லூரி முதல்வர் கே.சீதா லட்சுமி கூறியது:
 2016-17 கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இதுவரை 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுகளை விட கூடுதலாகும். படிப்புகளைப் பொருத்தவரை பி.காம்., பி.எஸ்சி. ஊட்டச் சத்து போன்ற படிப்புகளுக்கு மிக அதிகமானோர் விண்ணப்பித்திருக்கின்றனர் என்றார்.
 இந்தக் கல்லூரியில் 2014-15 கல்வியாண்டில் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 2015-16 கல்வியாண்டில் 14,300 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 சென்னை ராணி மேரி கல்லூரி முதல்வர் அக்தர் பேகம் கூறியது:
 கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமைதான் முடிவடைகிறது. இருந்தபோதும், விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டை விட கூடுதலாக விற்பனையாகியிருக்கிறது.
 வியாழக்கிழமை வரை 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
 படிப்புகளைப் பொருத்தவரை பி.காம். படிப்புக்குத்தான் மிக அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 2,700 பேர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக கணினி அறிவியல் படிப்புக்கு அதிமானோர் விண்ணப்பித்துள்ளனர். மற்ற படிப்புகளைப் பொருத்தவரை 600 முதல் 400 விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
 இந்தக் கல்லூரியைப் பொருத்தவரை 2014-15 கல்வியாண்டில் 12 ஆயிரம் பேரும், 2015-16 கல்வியாண்டில் 13,500 விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் பிரேமானந்த பெருமாள் கூறியது:
 மாநிலக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமையோடு முடிவடைகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 2 ஆயிரம் கூடுதலாகும். மேலும் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மேலும் 1,000 விண்ணப்பங்கள் விநியோகமாக வாய்ப்பு உள்ளது என்றார்.
 இதுபோல் அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், பிரபல தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 3,000 முதல் 5,000 அளவுக்கு கூடுதலாக விற்பனையானதாக கல்லூரி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அனுமதி கிடைக்குமா?
 கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள பல்கலைக்கழகம் அனுமதிக்குமா என்ற எதிர்பார்ப்பு கல்லூரி நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
 கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆர்வம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பி.காம்., பி.எஸ்சி. கணினி அறிவியல், பிசிஏ மற்றும் அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.
 இதனைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அவ்வப்போது பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கும். கடந்த 2015-16 கல்வியாண்டிலும் இந்தப் படிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட படிப்புகளில் 20 சதவீதம் அளவுக்கு இடங்களை உயர்த்திக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது.
 இதுபோல, நிகழாண்டும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் 20 முதல் 25 சதவீதம் வரை இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள பல்கலைக்கழகம் அனுமதிக்குமா என்ற எதிர்பார்ப்பு கல்லூரி நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.