பாஜகவுக்கு பொருந்தும் பழமொழி: குட்டி குலைத்தது; தாய் தலையில் விழுந்தது
ஒரு தெருநாய். தன் குட்டியோடு வாழ்ந்து வந்தது. எப்படி வாழ வேண்டும் என்று அடிக்கடி தன் குட்டிக்கு டிப்ஸ் கொடுக்கும்.


ஒரு தெருநாய். தன் குட்டியோடு வாழ்ந்து வந்தது. எப்படி வாழ வேண்டும் என்று அடிக்கடி தன் குட்டிக்கு டிப்ஸ் கொடுக்கும்.
‘நீ வீரனாக வாழவேண்டும். எந்த காலத்திலும் தீயவர்களுக்கு துணை போகக்கூடாது. நமக்கு உணவளிப்பவர்களுக்கு நன்றியுடன் இருக்கவேண்டும்', என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் போதனைகள் செய்து வந்தது.
ஒரு நாள் இருவரும் சென்று கொண்டிருந்தனர். எதிரே ஒரு முரட்டு நாய் வந்தது. அதைப் பார்த்தவுடன் தெருநாய்க்கு பயம் கவ்விக்கொண்டது. குட்டியை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த புதரில் போய் மறைந்து கொண்டது.
‘நாம் ஏன் இங்கு ஒளிஞ்சுக்கிறோம்' என்று கேட்டது குட்டி.
‘கொஞ்ச நேரம் பேசாம இரு' என்றது மெதுவான குரலில் தெருநாய்.
குட்டி நாய்க்கு எதுவும் புரியவில்லை. நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.
சில விநாடிகளில் புதரை கடந்து சென்றது முரட்டு நாய்.
‘அப்பாடா', என்று பெருமூச்சு விட்டது தெருநாய்.
அதுவரை பொருமையாய் இருந்த குட்டி நாய் சட்டென்று புதரைவிட்டு வெளியே வந்தது. முரட்டு நாயைப் பார்த்து ‘வல் வல்' என்று குரைத்தது. கோபமடைந்தது முரட்டு நாய். குட்டியை நோக்கி ஓடிவந்தது. பயந்து போன குட்டி, புதரில் பதுங்கியிருந்த தாய் நாயின் பின்புறம் சென்று மறைந்து கொண்டது. புதருக்குள் தெருநாய் பதுங்கியிருப்பது அப்போதுதான் முரட்டு நாய்க்கு தெரிந்தது. புதருக்குள் பாய்ந்தது முரட்டு நாய். தெருநாயை கடித்துக் குதறியது. வலி பொறுக்க முடியாமல் தெருநாய் கத்திக் கொண்டே ஓடியது. அதன் பின்னாலே குட்டியும் ஓடியது. வெற்றி பெற்ற பெருமையோடு முரட்டு நாய் மிடுக்காக நடக்கத் தொடங்கியது.
சிறிது நேர ஓட்டத்துக்குப் பிறகு ஓரிடத்தில் நின்றது தெருநாய். பின்னால் ஓடிவந்த குட்டியிடம் பேசியது.
‘உன்னை யார்டா குரைக்கச் சொன்னது', என்று வலி பொறுக்கமுடியாமல் கேட்டது தெருநாய்.
அமைதியாக நின்றது குட்டி. மீண்டும் பேசியது தெருநாய்.
‘நீ குரைத்ததால்தான் முரட்டு நாய் என்னை கடித்தது. வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே!' என்று கத்தியது தெருநாய்.
‘அது கடிக்குமுன்னு எனக்கு எப்படி தெரியும்? ஒவ்வொரு நாளும் நான் என்னென்ன செய்யனும்னு சொல்லிக்கொடுத்தீர்கள். ஆனால், எதைச் செய்யக்கூடாதுன்னு என்றைக்காவது சொல்லிக் கொடுத்தீர்களா? அப்படி சொல்லிக்கொடுத்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பேன். இப்படி ஓட வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது' என்றது குட்டி.
குட்டியின் கேள்வி இன்றைய அரசியல் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது.
நேற்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் மரியாதைக்குரிய தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் சில கருத்துகளை சொல்லியிருக்கிறார்.
‘காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைக்காக ஒன்றிணையாத அதிமுகவும், திமுகவும் கருப்பு பணத்துக்காக கைகோர்த்துள்ளனர்'
மக்கள் பணத்தை வாரி சுருட்டியவர்களும், வரி ஏய்ப்பவர்களும்தான் இன்று வங்கியில் வரிசையில் நிற்கும் மக்களைப் பற்றி பொய்யாகக் கவலைப் படுகிறார்கள் என்று மக்களின் மன ஓட்டங்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழிசை அவர்களே!
போராடும் அனைத்து கட்சிகளும் கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் முறைக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களையும், தொய்வுகளையும் யாரும் மறுக்கமுடியாது.
மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னையை பாராளுமன்றத்தில் எடுத்துச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? மத்திய அரசின் முடிவுகளை அப்படியே எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
எல்லா நேரங்களிலும், எல்லா முடிவுகளையும் இரண்டு நபர்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அந்த இருவரில் ஒருவர் அவசியமில்லை. இந்த கருத்தை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அதனால் கண்ணை மூடிக்கொண்டு எதிர்கட்சிகளின் கண்டனத்தை புறக்கணிக்க முடியாது.
கடந்த பதினாறு நாட்களாக மக்கள் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலையை வெளிப்படுத்துவது தவறா? மக்கள் பிரதிநிதிகள் மக்களின் பிரச்னைகளை சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? அப்படி சொல்லும் கட்சிகள் எல்லாம் திருடர்கள், மக்கள் பணத்தை வாரி சுருட்டியவர்கள், வரி ஏய்ப்பவர்கள் என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளுக்கு ஒன்றிணையாத கட்சிகள், கருப்பு பணத்திற்காக கைகோர்த்துள்ளார்கள்', என்று சொல்கிறீர்கள்.
காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளுக்கு முதல் எதிரி தேசிய கட்சிகள். முல்லை பெரியாறு பிரச்னைக்கு தீர்வு நீதிமன்றத்தின் மூலம் அதிமுக அரசால் பெறப்பட்டது. காவிரிக்கும் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு அதிமுக அரசால் பெறப்பட்ட போதும், மத்திய பாஜக அரசால் துரோகம் இழைக்கப்பட்டது. துருபிடித்த கத்தியால் தமிழக மக்களின் முதுகில் ஆழமாக குத்தியது காங்கிரஸ் அரசு. முதுகில் இருந்த கத்தியை உருவியது பாஜக அரசு. காப்பாற்றுவதற்காக அல்ல. காயத்தில் மண்ணைத் தூவி மீண்டும் கத்தியை சொறுகியுள்ளது. தமிழகத்திற்கு தேசிய கட்சிகள் துரோகத்தை தவிர தனிப்பட்ட முறையில் எதையும் செய்யவில்லை. பிரச்னையான விஷயங்களில் தேசிய கட்சிகள், மத்தியில் ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் தனி நிலைப்பாடு என்று இது நாள்வரை நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றன. ரூபாய் நோட்டு விவகாரத்தில் மட்டும் மாநில, மத்திய என்ற வித்தியாசம் இல்லாமல் ஒரே நிலைப்பாடு எடுப்பது என்பது எப்படி?
கருப்பு பண விவகாரத்தில் பிரதமர் மோடி அவர்களின் முயற்சி எந்த அளவிற்கு பலனைத் தரும் என்பதை யாரும் தெளிவாகச் சொல்லிவிட முடியாது. ஆளுக்கொரு தகவலை சொல்கிறார்கள். டிசம்பர் இறுதியில் மட்டுமே ஒரு தெளிவு கிடைக்கும். அதுவரை மத்திய அரசுக்கு நம்மால் ஆன ஒத்துழைப்பை கொடுப்பதுதான் நாட்டிற்கு நாம் செய்யும் பெரிய உதவி. அதைத்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் செய்கிறான்.
500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு என்பது ரகசியமாய் எடுக்கப்பட்ட முடிவு. அதனால் எந்த முன்னெச்செரிக்கை நடவைக்கைகளையும் மேற்கொள்ளவில்லை' என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.
கூட்டுறவு வங்கிகளின் செயல் முடக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. கிராமப்புறங்களின் இதயமாக இருப்பது கூட்டுறவு வங்கிகள். கருப்பு பணம் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பரிமாறப்படுகிறது என்று சொல்வது அபத்தம். தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் கருப்பு பண முதலைகளிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் என்று செய்திதாள்களில் படிக்கிறோம். அப்படியென்றால் ஏன் தேசிய வங்கிகளை முடக்கவில்லை?
ஒன்று நிச்சயம். மோடி அவர்களின் நடவடிக்கையால் தீவிரவாதிகளின் பணம் பயனற்று போயிருக்கிறது. பாகிஸ்தான் அச்சடித்த கள்ளநோட்டுகளின் புழக்கம் தடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் அமைதியில் மிதக்கிறது. அதனால், மோடி அவர்களின் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்றுக் கொள்வது, அதை அடுத்தவரை ஏற்றுக்கொள்ளச் செய்வது என்பது எளிதான காரியமல்ல. இன்றைய நிலையை மக்கள் ஏற்றுக்கொள்ள சிறிது காலம் தேவைப்படும். அதுவரை ஆளுங்கட்சியினர் தங்கள் நாக்குகளுக்கு ஓய்வு கொடுங்கள். தேவையற்ற விமர்சனங்களை செய்யாதீர்கள். தவறு நடக்காத இடம் உலகில் கிடையாது. தங்களைத் தவிர மற்ற எல்லோரும் திருடர்கள் என்று நினைக்கும் போக்கை மத்திய அரசும், பாஜகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களுக்கு வாருங்கள். மக்கள் படும் அவலங்களைப் பாருங்கள். “குட்டி குலைத்து நாய் தலையிலே விழுந்தது” என்று ஒரு பழமொழியை கிராமங்களில் கேட்கலாம். அந்த பழமொழி இன்றைய பாரதிய ஜனதாவிற்கு மிகவும் பொறுத்தமாக இருக்கும். உங்களுடைய பொறுப்பில்லாத பேச்சுக்களால், பிரதமர் மோடிக்கு சிக்கலை ஏற்படுத்தாதீர்கள். மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிராக பேசாதீர்கள்.
பாஜக மூத்த தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! உங்கள் சகாக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிகொடுக்கும் நீங்கள், முதலில் என்ன செய்யக்கூடாது என்பதையும் சொல்லிக்கொடுங்கள்.
- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...