பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி,


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி: ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ஈத்துவக்கும் இன்பம் என்றார் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமிய மக்களுக்கு வழிகாட்டுவது பக்ரீத் திருநாள். நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன. அத்தகைய அறிவுரைகளை நாளும் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள்.
ராமதாஸ்: உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பது தான் பக்ரீத் திருநாள் மூலம் உலக மக்களுக்கு உணர்த்தப்படும் செய்தியாகும். அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டும் தான் மகிழ்ச்சிப்படுத்தும். அதை உணர்ந்து, நபிகளின் போதனையைப் பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க சபதம் ஏற்போம்.
கே.ஆர்.ராமசாமி: உலக மக்கள் அனைவருக்கும் பகிர்ந்துண்ணும் மனிதநேயத்துடனும், ஜாதி, மத பேதமற்ற சமத்துவ வாழ்க்கை முறையைப் போதிப்பதே பக்ரீத் பண்டிகையாகும். நபிகளின் கட்டளைக்கேற்ப, அனைத்து சமுதாய மக்களும் எல்லா நலமும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன்: இறைதூதர் இப்ராஹிம் தனக்கு ஏற்பட்ட சோதனைகளையும் கடந்து, இறைவனின் உண்மையான தூதராக, தியாக உணர்வோடு செயல்பட்டதை நினைவு கூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தியாக உணர்வு, ஈகைத் தன்மை ஆகியவற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்தப் பண்டிகை போதிக்கின்றது. தியாகத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் சாந்தியும், சமாதானமும் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...