

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்திருக்க முடியுமா என்று முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
வருமான வரி சோதனை மற்றும் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் ராமமோகன ராவ்.
அப்போது அவர் கூறியதாவது, என் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் நான் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டேன். இது சட்ட விரோதம். தலைமைச் செயலர் வீட்டுக்குள் சிஆர்பிஎஃப் நுழைவது அரசியல் சாசனம் மீதான தாக்குதல்.
வருமான வரித்துறையினர் சோதனை நடத்த அனுமதி பெற்ற பட்டியலில் என் பெயர் இல்லை. என் மகன் பெயர்தான் இருந்தது. என் மகனின் வீட்டில் சோதனை நடத்த அனுமதி பெற்றுவிட்டு, என் வீட்டில் சோதனை நடத்தியது எப்படி.
தலைமைச் செயலகத்தை காப்பாற்ற அரசு தவறிவிட்டது. நான்தான் இன்னமும் தலைமைச் செயலர். என்னை, புரட்சித் தலைவி அம்மா, தலைமைச் செயலராக நியமித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் என்னை நியமித்தார்கள். தற்போதும் நான் தான் தலைமைச் செயலர். என்னை பதவி மாற்றம் செய்ய தமிழக அரசு தயங்குவது ஏன்? தலைமைச் செயளர் பதவியில் இருந்து என்னை மாற்றிவிட்டுத்தான் என் வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். தலைமைச் செயலருக்கே பாதுகாப்பில்லை என்றால், பொதுமக்களின் நிலை என்ன? என்று அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.