ஆர்.கே. நகர் பண வழங்கலுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ராமதாஸ் கேள்வி

ஆர்.கே. நகர் பண வழங்கலுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே. நகர் பண வழங்கலுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ராமதாஸ் கேள்வி

ஆர்.கே. நகர் பண வழங்கலுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத காளையாய் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆணையமோ பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பண வினியோகம் செய்யும் போது பல இடங்களில் மோதல்கள் ஏற்படுவது குறித்தும், திமுக நிர்வாகிகள் வெட்டப்பட்டது குறித்தும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். இதைத்தொடர்ந்து வடசென்னை மண்டலத்திற்கான காவல்துறை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், இரு துணை ஆணையர்கள், நான்கு உதவி ஆணையர்கள் உட்பட 22 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பண வினியோகத்தை தடுப்பதற்காக 28 சுற்றுக்காவல் குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏட்டளவில் பார்த்தால் இவை வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தான் என்றாலும், நியாயமான, சுதந்திரமான இடைத்தேர்தலை நடத்துவதற்கு ஒரு விழுக்காடு கூட உதவி செய்யப்போவதில்லை. பண வழங்கலைத் தடுக்க நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என ஆணையம் கூறிக்கொள்வதற்கு வேண்டுமானால் இவை பயன்படலாம்.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் உள்ள சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்களுக்கும் தலா ரூ.4000 வீதம் மொத்தம் ரூ.100 கோடி பணம் வினியோகிக்கப்பட்டு விட்டது. இடைத்தேர்தல் களம்  பணத்தால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு அதிகாரிகளை மாற்றுவதன் மூலமும், சுற்றுக்காவல் குழுக்களை அமைப்பதன் மூலம் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது? குதிரைகள் தப்பி ஓடிவிட்ட பின்னர் லாயத்தை எத்தனை பூட்டுகள் போட்டு பூட்டினாலும் அதனால் எந்த நன்மையும்  ஏற்படாது என்பதைப் போலவே, இப்போது ஆணையம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளாலும் பயன் கிடைக்கப்போவதில்லை. இத்தகைய சூழலில் இடைத்தேர்தலை ஒத்திவைப்பதும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும் அவர்களின் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்வது மட்டும் தான் ஒரே தீர்வாக இருக்கும். தொகுதி மக்களுக்கும் ஆளுங்கட்சி வேட்பாளர் தினகரன் தரப்பினர் ஓட்டுக்கு ரூ.4000 கொடுக்கும் காணொலிக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தினகரன் மீது நடவடிக்கை எடுக்கவும், தேர்தலை ஒத்திவைக்கவும் ஆணையம் தயங்குவது ஏன்? இன்னும் எத்தகைய ஆதாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆணையம் காத்திருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 389 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது; கடந்த 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு ஏற்ற சூழல் நிலவவில்லை என்பதை தேர்தல் அதிகாரிகளே ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ‘‘இடைத்தேர்தல்கள் சவால் நிறைந்தவை. அதிலும் குறிப்பாக அனைத்துக் கட்சிகளும் பெருமளவிலான தொண்டர்களை  வெளியூர்களிலிருந்து இறக்குமதி செய்து குவித்து வைத்துள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்துவது  மிகவும் கடினமாக உள்ளது. தேர்தல் ஆணையம் அதிக எண்ணிக்கையில் அதிகாரிகளை நியமனம் செய்திருந்தாலும் கூட, அவர்களை விட பல மடங்கு தொண்டர்களை அரசியல்கட்சிகள் குவித்துள்ளன. இதனால் தேர்தலை நியாயமாக நடத்துவது சாத்தியமல்ல’’ என்று பெயர் குறிப்பிடவிரும்பாத தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தேர்தலை ஒத்திவைக்க ஆணையம் முன்வராதது ஐயங்களை ஏற்படுத்துகிறது.

ஆளுங்கட்சி வேட்பாளர் மட்டும் தான் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுக்கிறார் என்று கூறமுடியாது. பன்னீர்செல்வம் அணி, திமுக வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கின்றனர். கொடுக்கப்படும் தொகை, கொடுக்கப்படும் நாள் ஆகியவற்றில் தான் ஆளுங்கட்சி, திமுக, பன்னீர்செல்வம் ஆகியவற்றுக்கிடையே வித்தியாசம் இருக்குமே தவிர,  மற்றபடி இந்த மூன்று தரப்புமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். திருமங்கலத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்த திமுகவுக்கு இந்த தேர்தலில் பணநாயகம் நடப்பதாக கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் பணியை தலைமையேற்று நடத்திய பன்னீர்செல்வம் இப்போது உத்தமர் வேடம் போடுவது தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சி என்பதைத் தவிர வேறில்லை.

தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஓட்டுக்கு பணம் தரப்போவதில்லை என பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை ஏற்க அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்திலுள்ள எந்தக் கட்சியும் தயாராக இல்லை என்பதிலிருந்தே நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பதற்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய சூழலில் ஓட்டுக்கு பணம் தருவதை  தடுத்து நிறுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும்.  இத்தகைய அத்துமீறல்கள்  காரணமாகத் தான் பா.ம.கட்சி இடைத்தேர்தலை புறக்கணித்தது. எனவே, இனியும் தாமதிக்காமல் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைத்து, பணம் கொடுத்த வேட்பாளர்களை  தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் வாக்குகளை விலைக்கு வாங்குவதை தடுக்கத் தேவையான தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com