

சென்னை: 10ம் வகுப்புப் பொதுத் தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக சென்டம் எடுக்கும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், பள்ளிக் கல்வித் துறை அதற்கு கிடுக்கிப் பிடி போட்டுள்ளது.
100/100 மதிப்பெண் எடுக்கும் விடைத்தாள்கள் இந்த ஆண்டு 3 முறை ஆய்வு செய்யப்பட உள்ளதால், நிச்சயமாக சென்டம் எடுக்கும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கைக் குறையும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மறு மதிப்பீடு செய்யும் போது சில விடைத்தாள் திருத்துவோர் தவறாக மதிப்பெண் போட்டிருந்த விவகாரமும், கடந்த 2 ஆண்டுகளாக நூற்றுக்கு நூறு எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக இருப்பதும் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
2015-16ம் ஆண்டு 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் சுமார் 1.15 லட்சம் பேர் சென்டம் வாங்கினார்கள். இது மட்டும் அல்லாமல் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களிலும் ஏராளமானோர் சென்டம் வாங்கியிருந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே, விடைத்தாள் திருத்தும் பணியை ஆய்வுக்குட்படுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதிய 10.3 லட்சம் மாணவ, மாணவியர்களின் விடைத் தாள்களை திருத்தும் பணி சுமார் 150 மையங்களில் நடைபெற உள்ளது. இங்கு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், சென்டம் கொடுக்க முழு தகுதி உள்ள விடைத்தாள்களுக்கு மட்டுமே கொடுக்கும்படியும், விடைத்தாள்களை சரியாக மதிப்பிடும்படியும் தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
சிறு பிழைகளுக்கும் மதிப்பெண்ணை குறைக்கும்படியும், மொழிப் பாடங்களில் சென்டம் மதிப்பெண் கொடுப்பதை தவிர்த்துவிடும்படியும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக நாமக்கல்லைச் சேர்ந்த மூத்த ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.
அதே போல, சென்டம் மதிப்பெண் பெற்ற விடைத்தாள்கள் மீண்டும் இரண்டு முறை மறு மதிப்பீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அந்த விடைத்தாள் சென்னை சென்று சேர்ந்ததும் மீண்டும் மறுமதிப்பீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.