வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் கீதாலட்சுமி; விசாரணை தொடக்கம் - முழு விவரம்

சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் கீதாலட்சுமி; விசாரணை தொடக்கம் - முழு விவரம்


சென்னை: சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விசாரணைக்கு தடைக் கேட்டு கீதாலட்சுமி சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், அவர் இன்று காலை சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

சென்னை ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில், ஏப்ரல் 7, 8-ஆம் தேதிகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனது வீட்டில் நடைபெற்ற சோதனையில், வெள்ளி பொருள்களுடன் நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன.

வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். அன்றைய தினம், ஏப்ரல் 10-இல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, அழைப்பாணை (சம்மன்) வழங்கப்பட்டது. எனது கோரிக்கையின் பேரில், நேரில் ஆஜராகும் தேதியை வருமான வரித் துறை புதன்கிழமைக்கு (ஏப்.12) மாற்றியது.

எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பானையில், தேவையான எந்தத் தகவல்களையும், வழக்கு குறித்த விவரங்களையும் வருமான வரித் துறையினர் தெரிவிக்கவில்லை. இது வருமான வரித் துறைச் சட்டம்-1961, பிரிவு 131-க்கு எதிரானது. எனவே, இந்த சம்மனை ரத்து செய்வதோடு, வருமான வரித் துறை நடவடிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கீதாலட்சுமிக்குக் கண்டனம் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அப்போது, நீதிபதி ரவிச்சந்திரபாபு கூறுகையில், வருமான வரித் துறையின் விசாரணையில் இருந்து தப்பிக்க முயல வேண்டாம். வருமான வரித்துறை சம்மன் ஒன்றும் வானத்தில் இருந்து விழவில்லை. உங்கள் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அது பற்றி விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com