உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி: தீபா மீது காவல் நிலையத்தில் புகார்

உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி: தீபா மீது காவல் நிலையத்தில் புகார்

உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தீபா பேரவைச் சேர்ந்த நிர்வாகி ஜானகிராமன் என்பவர் அளித்துள்ள அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் பொருளாளராக தான் இருப்பதாகவும் அவர் அறிவித்தார். மறுநாளே, அந்த அமைப்பின் பொதுச் செயலராகவும் தான் இருப்பதாக தீபா கூறினார்.

அதேவேளையில், சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பின் பதிவு விண்ணப்பத்தை நிராகரித்து ரத்து செய்தார். ஆனால் அதை தீபா எங்களிடமிருந்து மறைத்துவிட்டார்.

இதற்கிடையில், உறுப்பினர் சேர்க்கை படிவத்தை தீபா அறிமுகப்படுத்தினார். பேரவையில் உறுப்பினராக சேருவதற்கு அந்தப் படிவத்தை ரூ.10 கொடுத்து வாங்கி நிரப்பி, நிர்வாகிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார். இவ்வாறு அவர், சுமார் 2 லட்சம் விண்ணப்பப் படிவங்களை விநியோகித்தார்.

எனது மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக 5 ஆயிரம் படிவங்களை ரூ.50 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். ஆனால் அதற்கான ரசீது எதுவும் வழங்கப்படவில்லை. உறுப்பினர் படிவத்தில் இருந்த முகவரியும், பேரவையின் முகவரியும் மாறுப்பட்டிருந்தது. இவ்வாறு பல்வேறு குளறுபடிகள் அந்த படிவத்தில் இருந்தன.

உறுப்பினர் படிவம் மூலம் ரூ.20 கோடி வரை பெற்றுக் கொண்டு, தீபா மோசடி செய்துள்ளார். எனவே தீபா மீதும், அவருடன் மோசடிக்கு துணைபோகும் ராஜா, சுகன்யா மீதும் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com