தமிழறிஞர்கள் சோ.ந.கந்தசாமி, அ.தட்சிணாமூர்த்தி இரா.கலைக்கோவனுக்கு தொல்காப்பியர் விருது: மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு

தமிழறிஞர்கள் சோ.ந.கந்தசாமி, அ.தட்சிணாமூர்த்தி, இரா.கலைக்கோவன் ஆகியோருக்கு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழறிஞர்கள் சோ.ந.கந்தசாமி, அ.தட்சிணாமூர்த்தி இரா.கலைக்கோவனுக்கு தொல்காப்பியர் விருது: மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

தமிழறிஞர்கள் சோ.ந.கந்தசாமி, அ.தட்சிணாமூர்த்தி, இரா.கலைக்கோவன் ஆகியோருக்கு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. 15 பேருக்கு இளம் அறிஞர் விருது வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தமிழின் தொன்மை, தனித்தன்மை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. பழந்தமிழ் நூல்களை வெளியிட்டு அவற்றை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, நிதி வழங்குவது, தமிழாய்வில் நிலைத்த பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆய்வுத் திட்டங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆற்றியோருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. பண்டைக்காலம் தொடங்கி கி.பி.600 வரையிலான தமிழியல் சார்ந்த இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழிபெயர்ப்பு, வரலாறு, நுண்கலைகள், கட்டடவியல், தொல்பொருளியல், நாணயவியல், கல்வெட்டியல், சுவடியியல், பண்பாடு முதலிய துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வு நிகழ்த்தியோர் விருது பெறத் தகுதி உடையவர்.
தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஆண்டுதோறும் நினைவுப் பரிசும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது. அயல்நாடு வாழ் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் நினைவுப் பரிசும், ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய குறள்பீடம் விருது வழங்கப்படுகிறது. தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30-40 வயதுக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும், நினைவுப் பரிசும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய இளம் அறிஞருக்கான விருது (5 பேருக்கு) வழங்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் மே 9-ஆம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் மேற்கண்ட விருதுகள் வழங்கப்படும்.
தற்போது 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 ஆண்டுகளுக்கான தொல்காப்பியர் விருது, இளம் அறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2013-2014 தொல்காப்பியர் விருது: சோ.ந. கந்தசாமி
இளம் அறிஞர் விருது:
உல. பாலசுப்பிரமணியன்,
கலை. செழியன், சோ.
ராஜலட்சுமி, த. மகாலெட்சுமி,
செள. பா. சாலாவாணிஸ்ரீ.
2014-2015 தொல்காப்பியர் விருது: அ. தட்சிணாமூர்த்தி.
இளம் அறிஞர் விருது:
அ. சதீஷ், ஜெ. முத்துச்செல்வன்,
ப. திருஞானசம்பந்தம்,
மா. வசந்தகுமாரி, கோ. சதீஷ்.
2015-2016 தொல்காப்பியர் விருது: இரா. கலைக்கோவன்
இளம் அறிஞர் விருது:
மு. வனிதா, வெ. பிரகாஷ்,
ஸ்ரீ பிரேம்குமார், க. பாலாஜி,
மு. முனீஸ் மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com