தில்லியில் போராடிய விவசாயிகள் மீது கொலை வழக்கு போடுவோம் என மிரட்டல்: அய்யாக்கண்ணு பேட்டி

தில்லியில் 41 நாளாக போராடிய தமிழக விவசாயிகள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று செவ்வாய்கிழமை (ஏப்.,25) காலை 7 மணியளவில்
தில்லியில் போராடிய விவசாயிகள் மீது கொலை வழக்கு போடுவோம் என மிரட்டல்: அய்யாக்கண்ணு பேட்டி

சென்னை: தில்லியில் 41 நாளாக போராடிய தமிழக விவசாயிகள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று செவ்வாய்கிழமை (ஏப்.,25) காலை 7 மணியளவில் சென்னை சென்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர்.

விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் 41 நாள்களாக பல நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நடிகர்கள், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசர், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பழனிசாமி இறுதியாக போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி பேச்சு நடத்தினார். அதை ஏற்று, மே 25 வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.

அத்துடன், முதல்வர் ஏற்பாட்டில், தில்லியில் இருந்து விவசாயிகள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், இன்று செவ்வாய்கிழமை (ஏப் 25) காலை 7 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி. தில்லியில் போராட்டம் நடத்திய போது கொலை வழக்கு போடுவோம் என மிரட்டல்கள் வந்தன. கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக, பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவால் 15 நாட்களில் முடிவு சொல்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடி பார்க்க மறுத்ததால் தான் அவரது அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடந்தது என்று தெரிவித்தார்.

இன்றைய முழுஅடைப்புப் போராட்டத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ளனர். காவல்துறை அனுமதித்தால் சென்னை சென்ட்ரலில் இருந்து நடைப்பயணமாக எழும்பூர் வரை வந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இல்லாவிட்டால், சென்ட்ரலிலேயே போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நடத்தும் முழுஅடைப்பு போராட்டத்தில் பங்கேற்க விடாமல், நேரடியாக திருச்சி, தஞ்சாவூருக்கு, அவர்களை அனுப்பிவைக்க, அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் ஆதித்தனார் மேம்பாலம் அருகே அனைத்துக் கட்சினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் திருநாவுக்கரசர், கி.வீரமணி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் அய்யாக்கண்ணுவும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com