பேச்சுவார்த்தைக்கான சூழல் கனிந்துள்ளது: ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக இணைப்புக்காகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உகந்த சூழல் கனிந்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்


அதிமுக இணைப்புக்காகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உகந்த சூழல் கனிந்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுகவை இணைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணியினரும் திங்கள்கிழமை (ஏப்.24) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், சசிகலா, தினகரன் குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகளை மீண்டும் கூறி, அதை நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறினர். இதனால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணியின் மதுசூதனனும், அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று பழனிசாமி அணியின் திண்டுக்கல் சீனிவாசனும் கூறிக் கொண்டனர். இதனால், இரு அணிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும் நிலை இருந்தது.
இந்நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, பொன்னையன் உள்பட பலர் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை இணைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உகந்த சூழல் கனிந்திருக்கிறது என்றார். எப்போது பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இரு தரப்பிலும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
பேச்சுவார்த்தை தொடக்கம்: இரு தரப்பிலும் தொலைபேசி வாயிலாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஓரிரு நாளில் இரண்டு அணியின் பேச்சுவார்த்தைக் குழுவினரும் நேரில் சந்தித்துப் பேச உள்ளனர் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...