'அது 'மட்டும் நடந்து விட்டால் நாங்கள் எப்போதும் அண்ணன் தம்பிதான்: கே.பி.முனுசாமியின் 'சென்டிமெண்ட்' பேட்டி!

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்தை நடைபெறுவதற்கான சூழல் நெருங்கி வரும் வேளையில்...
'அது 'மட்டும் நடந்து விட்டால் நாங்கள் எப்போதும் அண்ணன் தம்பிதான்: கே.பி.முனுசாமியின் 'சென்டிமெண்ட்' பேட்டி!

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்தை நடைபெறுவதற்கான சூழல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது அவர் கூறியதாவது:

இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரு அணிகள் சார்பாகவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.   அதனை நோக்கிய ஒரு சுமுக நடவடிக்கையாக, எங்களது முதல் கோரிக்கையின் ஒரு பகுதியாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன.     இது தொடர்பாக எங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம். தற்பொழுது சூழல் இன்னும் இணக்கமாக இருக்கிறது.

இரு அணிகள் இணைப்பு தொடர்பாக எதிர் கருத்துக்களைக் கொண்டவர்கள் கூட தற்பொழுது சமாதானமாகி வருகிறார்கள் என்பதன் அடையாளமாகத்தான் நாங்கள் இந்த சூழ்நிலையை உணர்கிறோம். கட்சியை அபகரிக்க வந்துள்ள தீய சக்தியான சசிகலாவின் குடும்பம் மொத்தமும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு விட்டால் எப்பொழுதும் நாங்கள் அனைவரும் அண்ணன் தம்பிகள்தான்.    

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரிய எங்களது வேண்டுகோள் நிலைத்து இருக்கும். கைவிடப்படாது. கட்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம்கொடுக்கும் செயலில் தினகரன் இறங்கியுள்ளார். இது மிகப்பெரும் தவறு. இதற்கான விலையை அவர் அனுபவிப்பார். இறுதியில் தர்மம் வெல்லும்.

இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com