தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மேட்டூர் உள்ளிட்ட 5 அணைகளை தூர்வார நடவடிக்கை: முதல்வர்

மேட்டூர் உள்ளிட்ட 5 முக்கிய அணைகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:24 pm

DIN

மேட்டூர் உள்ளிட்ட 5 முக்கிய அணைகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்ட அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டார். ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் 140 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான வறட்சி நிலவுகிறது. வடகிழக்குப் பருவமழை, தென்மேற்குப் பருவ மழை பொய்துவிட்டதால் அணைகள், ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன.
வறட்சி காரணமாக குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கக் கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியப் போதிலும், குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் ஏரி, மதகு, கால்வாய் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் 1,519 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, பணிகள் செய்யப்படுகின்றன. குடிமராமத்துத் திட்டப் பணிகளுக்குக் கூடுதலாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் 25 யூனிட் வண்டல் மண்ணும், புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் 30 யூனிட் வண்டல் மண்ணும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2,241 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டு, நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, பயிர்க் காப்பீட்டுத் தொகையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரேனும் விடுபட்டிருந்தால், வட்டாட்சியர் மூலம் நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்வெட்டு இல்லை: தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. மாறாக, மின்பழுது காரணமாகவே மின்தடை ஏற்பட்டுள்ளது. மேலும், மின் உற்பத்தித் திட்டங்கள் பழைய கட்டுமானம் என்பதால் பழுது ஏற்பட்டிருக்கலாம். தமிழகத்தில் தேவையான அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இறந்த விவசாயிகள் 82 பேருக்கும் மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 65 பேர் இறந்துள்ளனர். மேலும், நிலம் இல்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்கு நிதி தர முடியாது.
தமிழகத்தில் உள்ள மேட்டூர், வைகை, அமராவதி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் பெருஞ்சாணி என 5 முக்கிய அணைகளைத் தூர்வார விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தூர்வாரும் பணி தொடங்கப்படும்.
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. இதில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவப் பட்ட மேற்படிப்பு 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து பிரச்னையில் மருத்துவர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கிறது. மத்திய அரசுதான் இப்பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் எந்தப் பாதிப்பும் இல்லை.
சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கக் கூடாது என்று கூறி பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். பிரதமரிடம் இருந்து நல்ல பதில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

எந்தக் கோப்பும் நிலுவையில் இல்லை
முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை 1,560 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். எந்தக் கோப்பும் நிலுவையில் இல்லை. அரசு இயந்திரம் வேகமாகச் செயல்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கோப்புகள் வந்தவுடன் பார்க்கப்பட்டு கையெழுத்திடப்படுகின்றன. இதுவரை எந்தக் கோப்பும் நிலுவையில் வைக்கப்படவில்லை.
டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படுகின்றன. அந்தவகையில் ஏற்கெனவே 500 கடைகள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து மேலும் 500 கடைகள் மூடப்பட்டன.
தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளில் பணியிழந்தவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் மதுக் கடைகளுக்காக நெடுஞ்சாலைகள் வகை மாற்றம் செய்யப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளாட்சிக்கு தேவையான சாக்கடை மற்றும் தடுப்பு அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால், அதை வகைமாற்றம் செய்வதற்கு ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.