நிர்வாகத் திறமையில்லாதவர் ஓபிஎஸ்: அமைச்சர் சி.வி.சண்முகம்

ஓ.பன்னீர்செல்வத்திடம் நிர்வாகத் திறமை இல்லாததால்தான் 45 நாள்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது என மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
நிர்வாகத் திறமையில்லாதவர் ஓபிஎஸ்: அமைச்சர் சி.வி.சண்முகம்

ஓ.பன்னீர்செல்வத்திடம் நிர்வாகத் திறமை இல்லாததால்தான் 45 நாள்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது என மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முன்னிலை வகித்து அவர் மேலும் பேசியதாவது: எம்ஜிஆருக்கு விழா நடத்துவது, அவருக்குச் செய்யும் நன்றியாகவே கருதுகிறேன். அவர்தான் எனது தந்தைக்கு வாய்ப்பு வழங்கினார். அவருக்குப் பிறகு எனக்கு வாய்ப்பு வழங்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நான் சில தவறுகள் செய்திருந்தாலும், அதனையும் மன்னித்து ஏற்றுக்கொண்டவர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என ஜெயலலிதாதான் கூறினார். அதன்படி, இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? என அரசியல் எதிரிகள் ஆருடம் கூறுகிறார்கள். இங்கு (அதிமுக அம்மா அணியில்) இருப்பவர்களைவிட அதிகச் சொத்துகளையும், பதவிகளையும் அனுபவித்தவர்கள்அவர்கள்தான் (புரட்சித் தலைவி அம்மா அணி). ஆனால், தற்போது, இந்த ஆட்சியைக் குறை கூறுகிறார்கள். அவர் (ஓபிஎஸ்) ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்தியவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 45 நாள்கள்கூட அவரால் ஆட்சியை நடத்த முடியவில்லை. நிர்வாகத் திறமை இல்லாததால்தான் அவருடைய ஆட்சி 45 நாள்களில் கவிழ்ந்தது. ஆனால், நிர்வாகத் திறமை கொண்டவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் யாருடைய பின்புலமும் இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல் 7 மாதங்களாக ஆட்சியைக் தொடர்ந்து வருகிறார் என்றார் சி.வி.சண்முகம்.

பேரவைத் தலைவர் தனபால்: சி.வி.சண்முகம் துடிப்புமிக்க இளைஞராகத் திகழ்பவர். துறை சார்ந்த குறிப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பவர். அதனால்தான் சட்டப் பேரவையில் எதிர்க் கட்சியினரின் கேள்விகளுக்கு, அவர்களை மடக்கும் வகையில் பதிலளிக்கிறார்.

அவர் சட்டத் துறை அமைச்சராக உள்ள நிலையில், ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு, கடந்த 7 மாதங்களில் 196 நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளது. யாருக்கும் தலை வணங்காது, மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் எம்ஜிஆர். தொடர்ந்து, 3 முறை வெற்றி பெற்று ஆட்சி நடத்தியவர். அதன்பிறகு, ஜெயலலிதா செவ்வனே ஆட்சி நடத்தினார். தற்போது எடப்பாடி பழனிசாமி கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் என்றார் தனபால்.

விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, ஆர்.காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார், இரா.துரைக்கண்ணு, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி, பா.பெஞ்சமின், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், பி.பாலகிருஷ்ணாரெட்டி, நிலோபர் கபில் உள்ளிட்டோரும், எம்.பி.க்கள் செஞ்சி ஏழுமலை, க.காமராஜ், எம்எல்ஏக்கள் இரா.குமரகுரு, எம்.சக்கரபாணி, அ.பிரபு, கூட்டுறவு சர்க்கரை இணையத் தலைவர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி, விழுப்புரம் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயகுமார், வாரியத் தலைவர்கள் பா.வளர்மதி, பி.கே.வைரமுத்து, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜி.பாஸ்கரன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆர்.டி.முருகவேல், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஷர்மிளா நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, செய்தித் துறைச் செயலர் இரா.வெங்கடேசன் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com