உலக அளவில் முதல் 10 மொழிகளில் தமிழைக் கொண்டு வர நடவடிக்கை

உலக அளவில் முதல் 10 மொழிகளில் தமிழைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்.
விழாவில் பேசுகிறார் அமைச்சர் க. பாண்டியராஜன்.
விழாவில் பேசுகிறார் அமைச்சர் க. பாண்டியராஜன்.
Published on
Updated on
1 min read

உலக அளவில் முதல் 10 மொழிகளில் தமிழைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பண்பாட்டு மையத் தொடக்க விழாவில் அவர் பேசியது:
உலக மக்கள்தொகை 705 கோடி. உலக அளவில் 6,500 மொழிகள் பேசப்படுகின்றன. இதில், 2,000 மொழிகள் அழியும் நிலையில் உள்ளது என யுனெஸ்கோ அறிக்கை கூறுகிறது.
உலக அளவில் அதிக அளவில் பேசக்கூடிய மொழியாக சீனாவில் உள்ள மாண்டரின் மொழி உள்ளது. இம்மொழியை 111 கோடி பேர் பேசுகின்றனர். 2 ஆவது இடத்தில் உள்ள ஆங்கில மொழியை 105 கோடி பேர் பேசி வருகின்றனர். நம் தமிழ் மொழி 16 ஆவது இடத்தில் உள்ளது.
மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ் மொழியை உலக அளவில் முதல் 10 மொழிகளில் ஒன்றாக இடம்பெறச் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மொழியும் உலகமயமாகி வருகிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஆங்கில மொழியில் குறைந்தது 1,000 புது சொற்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழ் மொழியில் கடந்த 6 மாதங்களில் 450 புதிய சொற்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழிலும் புதிய சொற்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும். அதற்கான அதிகாரம் படைத்த அமைப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் அடுத்த மூன்று ஆண்டுகளில் முதல் 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இடம்பெற வேண்டும்.
மேலும், இணைவுக் கல்லூரிகள் கொண்ட பல கலைகளின் பல்கலைக்கழகமாக மாற வேண்டும் என்றார் பாண்டியராஜன்.
துணைவேந்தர் க. பாஸ்கரன் தலைமை வகித்தார். வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், பதிவாளர் ச. முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com