சாக்பீஸ் கார்விங் முறையில் செய்யப்பட்ட 1,330 'அ' என்ற எழுத்துகளைக் கொண்டு, திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கி, சீர்காழி இளைஞர் சாதனைப் படைத்துள்ளார்.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர் நகை தொழிலாளி அன்பழகனின் மகன் அரவிந்தன் (21). கல்லூரிப் படிப்பை முடித்துள்ள இவர், சிறு வயது முதலே ஓவியத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளார்.
அதன் விளைவாக, 3 ஆயிரம் ஓவியங்கள், களிமண் சிற்பங்கள் மற்றும் சாக்பீஸ், பென்சிலைக் கொண்டு, கார்விங் முறையில் பல்வேறு சிற்பங்களை உருவாக்கியுள்ளார்.
தாய், தந்தை மற்றும் தங்கையுடன் பழுதடைந்த சிறிய வீட்டில் வசித்து வரும் அரவிந்தன், ஏழ்மை நிலையிலும் ஓவியத்தை தனது உயிர் மூச்சாக கொண்டுள்ளார்.
அரவிந்தன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட போதிலும், ஓவியத்தை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்ல மனமின்றி தனது திறமையைப் பயன்படுத்தி பிறந்த நாள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் பரிசுப் பொருள்களைத் தயாரித்து, விற்பனை செய்துவருகிறார். அதன்மூலம் கிடைக்கக்கூடிய சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஓவியம் மூலம் ஏதாவது சாதிக்க வேண்டும் என திட்டமிட்ட அரவிந்தன், 3அடி உயரத்தில் கார்விங் முறையில் சாக்பீஸால் 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில் தமிழின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை 1,330 எண்ணிக்கையில் சாக்பீஸ்களை செதுக்கி உருவாக்கினார். பின்னர், அந்த எழுத்துகளைக் கொண்டு, திருவள்ளுவர் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஓவியத்தில் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க, தமிழக அரசு தனக்கு ஓவியம் சார்ந்த பணி வழங்கி உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.