மேட்டூர் அணையிலிருந்து சேலத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், மேட்டூரிலிருந்து சேலத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். கூட்டத்தில், தரையில் அமர்ந்து கோஷமிடும் விவசாயிகள். 
திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். கூட்டத்தில், தரையில் அமர்ந்து கோஷமிடும் விவசாயிகள். 
Updated on
2 min read

திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், மேட்டூரிலிருந்து சேலத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். 
கூட்டத்தில், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் பேசியது:
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் 13 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. எனவே, டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது அவசியமாகிறது. 
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கென சில வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அந்த வகையில், டெல்டா பாசன விவசாயத்துக்கு மட்டுமே காவிரி நீரை திறக்க வேண்டும். ஆனால், விதிகளுக்கு புறம்பாக சேலம் மாவட்டத்துக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பின்னர், இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி விவசாயிகள் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வெளியேற, அரசு அலுவலர்கள், போலீஸார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே கூட்டரங்கில் போராட்டம் நடத்துவது குறித்து, விவசாயிகளிடையே முரண்பாடான கருத்து ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் கூட்டத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர், திருவாரூர் மாவட்டத்தில், தண்ணீரை முறைப்படுத்தி விடுவது குறித்து விவசாயிகளிடையே பேசினார். 
கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம்:
குடவாசல் ஜி. சுந்தரமூர்த்தி... சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்குத் தண்ணீர் தேவை. ஆற்றில் வருகிற தண்ணீரை வாய்க்காலில் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும். தண்ணீர் இல்லாத இடங்களில் டீசல் இயந்திரத்தைப் பயன்படுத்தி நீர் இறைக்க வேண்டியுள்ளது. எனவே, மானிய விலையில் டீசல் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வலங்கைமான் கிருஷ்ணமணி பசுந்தாள் உரங்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அறுவடை தொடங்கும் நேரம் என்பதால் நெல்லுக்கான ஊக்கத்தொகையை அறிவிக்க வேண்டும்.
நன்னிலம் ஜி. சேதுராமன்... தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகத்திடமிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயப் பணிகளின்போது தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை ஏற்படுவதால், எப்போது நடுவது, விதைப்பது என்பது குறித்து அரசு அறிவுறுத்த வேண்டும். பல இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தூர்வாரும் பணிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கங்களாஞ்சேரி சா. வீ. ராமகிருஷ்ணன்... மத்திய, மாநில அரசு அலுவலர்கள் அனைவரும் இயற்கை முறை சாகுபடியை ஏற்றுக் கொள்கின்றனர். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுமைக்கும் இயற்கை விவசாயத்துக்கு ஆதரவு உள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகளில் இயற்கை முறை சாகுபடியை பாடத்திட்டமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பேசியது: திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் 209 மி.மீ. மழை பெய்துள்ளது. 1,47,698 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறையில் சான்று பெற்ற நெல் விதைகள் 55 மெட்ரிக் டன்களும், உளுந்து விதை 304 மெட்ரிக் டன்களும், பச்சைப் பயறு விதை 8 மெட்ரிக் டன்களும், நிலக்கடலை விதை 1.07 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறை விதை விற்பனை நிலையங்கள் மூலம் நெல் விதை 1,450 மெட்ரிக் டன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்றார். 
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் க. மயில்வாகனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தியாகராஜன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிசந்திரன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டை செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com