தேர்வு முறைகேடு காரணமாக மூடப்பட்ட, வெளி மாநிலங்களில் இயங்கி வந்த தங்களது கல்வி மையங்களை தமிழக எல்லைக்குள் தொடங்க, சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
யுஜிசி அங்கீகாரம் ரத்து: தொலைநிலைக் கல்வி வழங்கி வரும் மாநில பல்கலைக்கழகங்கள், அந்தந்த மாநில எல்லைகளைத் தாண்டி கல்வி மையங்களை (ஸ்டடி சென்டர்) அமைக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகப் பல்கலைக்கழகங்கள் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் கல்வி மையங்களை நடத்தி வந்தன.
இதையடுத்து, சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் தொலைநிலைப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை 2016 -17 ஆம் ஆண்டு யுஜிசி ரத்து செய்தது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னை தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார் சபா ஆகிய தமிழக கல்வி நிறுவனங்களின் தொலைநிலைப் படிப்புகளுக்கு மட்டுமே 2016-17 ஆம் ஆண்டில் யுஜிசி அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் 2016 -17 ஆம் ஆண்டுக்கு மட்டும் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தியது. அதன் பிறகு வேறு வழியின்றி, யுஜிசி அங்கீகாரத்தைப் பெறும் வகையில் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கல்வி மையங்களை 2016 -ஆம் ஆண்டே சென்னைப் பல்கலைக்கழகம் படிப்படியாக மூடியது.
தேர்வு முறைகேடு: கல்வி மையங்கள் மூடப்பட்டு வந்த நிலையில், மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இயங்கி வந்த சில கல்வி மையங்களில் தேர்வு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை பல்கலைக்கழகம் கண்டறிந்தது. இதை விசாரிப்பதற்கென விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட 30 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விளக்கம் அளிக்காத 10 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழகம் அண்மையில் நடவடிக்கையை எடுத்தது.
ஆய்வு நடத்தாமல் அனுமதி:இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய தமிழக எல்லையில் புதிதாக ஒரு கல்வி மையத்தை திறக்க, கடந்த நவம்பரில் நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிக் குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் மூடப்பட்ட கல்வி மையத்தை தற்போது, தமிழக எல்லைக்குள் தொடங்க பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது. இந்தப் புதிய கல்வி மையத்தில் பல்கலைக்கழகம் சார்பில் எவ்வித ஆய்வும் நடத்தப்படவில்லை. பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை, தேர்வு முறைகேடு நடைபெற்ற பிற மாநிலங்களில் செயல்பட்டு வந்த கல்வி மையங்களும், தமிழக எல்லைக்குள் படிப்படியாகத் தொடங்குவதற்கு வழிவகுத்து விடும். இது உயர் கல்வியின் தரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். அதுமட்டுமின்றி, யுஜிசி-யின் புதிய வழிகாட்டுதலுக்கும் எதிரானது. எனவே, தனியார் பயிற்சி மையங்கள் மூலம் நடத்தப்படும் இதுபோன்ற கல்வி மையங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விரிவான ஆய்வுக்குப் பின் நடவடிக்கை: துணைவேந்தர்
பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் அனுமதியுடன்தான், பொள்ளாச்சியில் புதிய கல்வி மையம் நடத்த அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களும் பல ஆண்டுகளாக, அவற்றின் எல்லையைத் தாண்டி, அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மையங்களை அமைத்து வருகின்றன.
எனவே, யுஜிசி-யின் புதிய வழிகாட்டுதல் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றார் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி.
யுஜிசி புதிய வழிகாட்டுதல் கூறுவதென்ன?
பட்டப் படிப்புகளை வழங்கும் தொலைநிலைக் கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி அண்மையில் வெளியிட்டது. அதன்படி, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தொலைநிலை படிப்புகளுக்கான வகுப்புகளை, அந்தப் பல்கலைக்கழகத்தின் சொந்த துறைகள் மூலமாகவோ அல்லது உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் மூலமாக மட்டுமே நடத்த வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ளதை போன்று தனியார் பயிற்சி மையங்கள் மூலமாகவோ, கிளை அமைப்புகள் மூலமாகவோ தொலைநிலைப் படிப்புகளையோ அல்லது பயிற்சியையோ வழங்கக் கூடாது. உதவிப் பேராசிரியர் அளவிலான நபர் மூலமாகவே வகுப்புகளும், ஆய்வுக் டப் பயிற்சிகளும் நடத்தப்பட வேண்டும்.
முக்கியமாக, பல்கலைக்கழகங்கள் அவற்றின் எல்லையைத் தாண்டி, தொலைநிலைப் படிப்புகளுக்கான கல்வி மையங்களை அமைக்கக் கூடாது என யுஜிசியின் புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி, சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே கல்வி மையங்களை அமைக்க முடியும். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மட்டுமே கல்வி மையங்களை அமைக்க முடியும். இதுபோல பிற பல்கலைக்கழகங்களும் அவற்றின் எல்லைக்குள் மட்டுமே கல்வி மையங்களை அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இல்லையெனில், இந்தப் பல்கலைக்கழகங்களின் தொலைநிலைப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை யுஜிசி மீண்டும் ரத்து செய்யும் நிலை ஏற்படும் என்கின்றனர் பேராசிரியர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


