கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்: துணைபோகும் மருத்துவர்கள்

தமிழகத்தில் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்: துணைபோகும் மருத்துவர்கள்
Updated on
3 min read

தமிழகத்தில் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்த மாபாதகச் செயலுக்கு ஸ்கேன் மையங்களும், மருத்துவர்களும் துணைபோவது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆண் சிசு இறப்புடன் ஒப்பிடுகையில், பெண் சிசுவின் இறப்பு விகிதம் 75 சதவீதம் அதிகம். உலகின் பல நாடுகளிலும் 100 ஆண் குழந்தை பிறக்கும்போது, 105 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆனால், இந்தியாவில் 100 ஆண்களுக்கு 90-க்கும் குறைவான பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்துக்குப் புறம்பாக கருவிலேயே கொலை செய்யப்படுவதாகக் கூறுகிறது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. இதனால் ஆண், பெண் விகிதாசாரம் அதிகளவில் வேறுபடுகிறது.


ஏழைகளின் எதிரி

இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழ்மையான மக்களே அதிகம் இருப்பதால், ஒரு பெண் குழந்தையைப் பெற்றது முதல், வளர்த்து, அப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் வரையில் ஏற்படும் செலவுகளை வறுமையின் காரணமாக பெற்றோர்களால் சமாளிக்க முடிவதில்லை. இதனால் வேறு வழியின்றி பெண் குழந்தைகளைக் கொலை செய்யும் பழக்கம், இந்தியா சுதந்திரம் பெறும் முன்பிலிருந்து இன்றுவரை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
1990 ஆம் ஆண்டுக்கு முன்புவரை மருத்துவ வசதிகள் சரிவரக் கிடைக்காத, சென்று சேராத நிலையிலும், கிராமப்புறங்களில் இருக்கும் மருத்துவச்சிகளின் உதவியால் கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரிந்து கொண்டனர் மக்கள். பெண் குழந்தை என்று தெரியவந்தால், கருக்கலைப்பு செய்ய முயற்சித்தனர்.
அது நிறைவேறாதபட்சத்தில், குழந்தை பிறந்ததும் கள்ளிப்பால், நெல் என அதற்குக் கொடுத்து சிசுக் கொலை செய்தனர். அதற்கு மனம் ஒப்பாதவர்கள், குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றனர்.

17 ஸ்கேன் மையங்கள் "சீல்'

மருத்துவ வசதி முன்னேறி, நவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறை வந்தபிறகு, கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என எளிதில் தெரிந்துகொண்டு பெண் குழந்தைகளை சர்வ சாதாரணமாக கருக்கலைப்பு செய்து அழித்து வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது பெண் சிசுக் கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அவை இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
தமிழகத்தில் ஆண்டுக்கு 5,000 பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவதாக ஸ்கேன் மையங்கள் தொடர்பான விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சுகாதாரத் துறை மேற்கொண்ட சோதனையில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் நாமக்கல், கரூர், தேனி மாவட்டங்களில் மட்டும் 17 ஸ்கேன் மையங்கள் "சீல்' வைக்கப்பட்டுள்ளன. இதற்கு வேறு விதமான காரணங்கள் அறிக்கையில் சொல்லப்பட்டாலும், ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் சொல்வது பாலின விவரத்தை பெற்றோருக்குத் தெரிவித்ததுதான் என்கின்றனர்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்

பெண் சிசுக் கொலை தொடந்து கொண்டே செல்வதால், தமிழகத்தில் இப்போது 100-க்கு 90 என்ற அளவில் ஆண்-பெண் விகிதாசாரம் குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் இன்னும் குறையாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றார் பெண் சிசிக் கொலையைத் தடுக்கும் விழிப்புணர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.ரங்கநாதன்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 12 மில்லியன் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான மொத்தக் குழந்தைகளில் ஆண் குழந்தைகளை விட 71 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக உள்ளனர் என்று 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
இதே வயதுக் குழந்தைகளில் ஆண்களைவிட பெண் குழந்தைகள் 60 லட்சம் குறைவாக இருந்தனர் என்று 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
42 லட்சம் பெண் குழந்தைகள் மட்டுமே குறைவாக இருந்ததாக 1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பு காட்டுகின்றது. மொத்தக் குழந்தைகளில் ஆண்களை விட 42 லட்சம் குறைவாக இருந்த பெண் குழந்தைகள் எண்ணிக்கை 30 ஆண்டுகளில் 71 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு இடையேயான மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் பெண் குழந்தைகள் குறைவதன் எண்ணிக்கை உயர்ந்து வருவது கருக்கலைப்பு கூடிக் கொண்டிருப்பதையே உணர்த்துகிறது.
பெண் சிசுக் கொலை கட்டாயம் தடுக்கப்பட வேண்டும், என்பதை வலியுறுத்தி எங்களுடைய அமைப்பு மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது. பொதுமக்களிடமும், மருத்துவர்களிடமும் மன மாற்றம் ஏற்பட்டால் தான் பெண் சிசுக் கொலை என்னும் சமூக நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்றார்.


சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்


கடந்த 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் என்றிருந்த பிறப்பு விகிதம், 2011இல் 1,000-க்கு 914 ஆகக் குறைந்தது. கரு அழிப்புகள் மட்டும் நிகழாவிட்டால், இயற்கையாகவே 1000 ஆணுக்கு 952 பெண் என பிறப்பு விகிதம் அமைந்திருக்கும். ஆனால், அந்த எண்ணிக்கையை அடைவதை கரு அழிப்பு தடுத்துவிட்டது என்கிறார் நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணுரிமை செயல்பாட்டாளர் எஸ்.கருணாம்பிகை.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது, பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கருவிலேயே கண்டறிவது தொடர்பான பிரசவத்திற்கு முந்தைய கண்டுபிடிப்புத் தொழில்நுட்பச் சட்டத்தின்படி செயலிழப்பு, பேராசை கொண்ட ரேடியாலஜிஸ்ட், பணமே குறியாகக் கொண்ட மகப்பேறு மருத்துவர்கள், சட்டத்திற்குப் புறம்பாகப் பெருகிக் கொண்டிருக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையங்கள் போன்றவை அத்துமீற உதவியாக அமைந்துவிட்டது. கருக்கலைப்பு மருத்துவச் சட்டம் (பட்ங் ஙங்க்ண்ஸ்ரீஹப் பங்ழ்ம்ண்ய்ஹற்ண்ர்ய் ர்ச் டழ்ங்ஞ்ய்ஹய்ஸ்ரீஹ் அஸ்ரீற்-1971). இந்தச் சட்டத்தின்படி, கருவில் வளரும் குழந்தை, தாயின் நலத்திற்குப் பெரும் ஆபத்து என்று ஒரு மருத்துவர் கருதினால் போதும். அந்தக் கருவை அவர் கலைத்து விடலாம்.
சட்டத்திற்குப் புறம்பாக அவர் கருவைக் கலைக்கும் போது கூட இந்தச் சட்டத்தின் காரணமாக அவரைத் தண்டிக்க முடியாது. தாயின் நலத்திற்குப் பேராபத்து என்ற காரணத்தைச் சொல்லி அவர் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம். இத்தகைய சட்டங்களில் திருத்தம் செய்து கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பெண் சிசுக் கொலையை படிப்படியாக குறைக்க முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com