யூனியன் பிரதேச சட்டப்படிதான் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம்

யூனியன் பிரதேச சட்டப்படிதான் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம்

யூனியன் பிரதேச சட்டப்படிதான் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது என, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
Published on

யூனியன் பிரதேச சட்டப்படிதான் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது என, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவர்கள் தவிர, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களை துணை நிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார். அங்கு பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், தற்போது பாஜகவைச் சேர்ந்த மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இது புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை. மேலும் அவர், அரசாணை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஆளுநர் மாளிகையில் ரகசியமாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் கிரண் பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் யூனியன் பிரதேச சட்டத்தின்படிதான் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் இதற்குரிய நபர்களின் பெயர்களைப் பரிந்துரைத்து புதுவை அரசுக்கு அனுப்பியது.
யூனியன் பிரதேசத்தின் தலைமை நிர்வாகி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கலாம். சட்டத்தில் இதுகுறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் கிரண் பேடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com