தமிழக மீனவர்களைப் பாதிக்கும் இலங்கை சட்டம்: மத்திய அரசு ஆட்சேபிக்க முதல்வர் கடிதம்

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்போருக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு ஆட்சேபிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
தமிழக மீனவர்களைப் பாதிக்கும் இலங்கை சட்டம்: மத்திய அரசு ஆட்சேபிக்க முதல்வர் கடிதம்
Updated on
2 min read

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்போருக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு ஆட்சேபிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் வெள்ளிக்கிழமை எழுதிய கடித விவரம்: இலங்கை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மீன்வள மசோதா தொடர்பாக எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடல் அடிப்பகுதியில் மீன் பிடிப்பது உட்பட சில மீன்பிடி முறைகளைத் தடை செய்து அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இம்மசோதாவில், மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை மீன்பிடிப்புக்காக இலங்கை கடற்பகுதியில் உபயோகித்தால், அவை கைப்பற்றப்படுவதோடு மீனவர்கள் 2 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்படுவர் என்றும் இலங்கை ரூபாய் அளவில் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கருத்தில் கொள்ள ஒப்பந்தங்கள்: பாக். நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்களின் உரிமைகள், இந்தியா, இலங்கை இடையே கச்சத்தீவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்குப் பிறகு கையை விட்டுப் போய்விட்டன. தமிழக மீனவர்களின் அவல நிலையைக் கருத்தில் கொள்ளாத ஒப்பந்தங்கள் அவை.
இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த மசோதா, ஏற்கெனவே வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் லட்சக் கணக்கான தமிழக மீனவர்களின் நலனை அழிக்கச் செய்யும் பிற்போக்குத்தனமான மசோதாவாகும்.
தேவையற்ற மசோதா: இந்திய மற்றும் இலங்கை மீனவர் பிரச்னைகளின் தீர்வுக்காக அமைச்சர்கள், ஒருங்கிணைப்புக் குழுவினர் அண்மையில் கூடிப் பேசிய நிலையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பிரச்னைகளின் தீர்வுக்காக இரண்டு நாடுகளின் அரசுகளும் இணைந்து எடுக்கும் முயற்சிகளை இந்த மசோதா பாதிக்கும். ராஜீய ரீதியாக எடுக்கப்படும் முயற்சிகளுக்குப் பெருத்த பின்னடைவை உருவாக்கும். தமிழக மீனவர்களின் படகை பிடித்து வைத்துக் கொள்ளும் மனிதாபிமானமற்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு இருப்பதால், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை தங்கள் கவனத்துக்கு மீண்டும் மீண்டும் கொண்டு வந்திருக்கிறேன்.
கடந்த 2015- ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 50 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர், 143 படகுகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளன என்பது தாங்கள் ஏற்கனவே அறிந்ததாகும். படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்பதுபற்றி உங்களிடம் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறேன்.
அந்தப் படகுகள் அனைத்தும் பல மாதங்களாக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் கடந்த பிப்ரவரியில் நடந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும், இதுதொடர்பாக தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற செயல்பாட்டினால், தமிழக மீனவர்களுக்கு ஏற்கனவே தனிப்பட்ட முறையில் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம், நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, தமிழக மீனவர்களிடையே அமைதியின்மையையும், வேதனையையும் உருவாக்கி உள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தின்படி தமிழக மீனவர்கள் பல நூற்றாண்டுகளாக வைத்துள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமையைத்தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்துள்ளது. மீனவர்கள் பிரச்னையில் நிரந்தரத் தீர்வுக்காக மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வரும்போது இதுபோன்ற மசோதாவை அறிமுகம் செய்வது, ஒரு கடினமான செயல்பாடாகும்.
இதுபோன்ற வாழ்வாதாரப் பிரச்னைகளில் புதிய மேம்பாடுகள், மாற்று வழிகள்தான் கொண்டு வரப்பட வேண்டுமே தவிர தண்டிக்கும் விதமாக இப்படி திடீரென்று தடை விதிப்பது தவறானதாகும்.
எனவே பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக, இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு கடுமையான ஆட்சேபணையை பதிவு செய்ய வேண்டும். அதற்கான தகுந்த உத்தரவை மத்திய வெளியுறவுத் துறைக்குப் பிறப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com