கிழக்குக் கடற்கரையோர ரயில்பாதை பணிகள் நிறைவேறுவது எப்போது?
சென்னை- கன்னியாகுமரி இடையே அமைக்கப்பட்டு வரும் 1,002 கி. மீ. தொலைவு கடற்கரையோர ரயில்பாதை பணியில் 462 கி. மீ. தொலைவுக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இத்திட்டம்


சென்னை- கன்னியாகுமரி இடையே அமைக்கப்பட்டு வரும் 1,002 கி. மீ. தொலைவு கடற்கரையோர ரயில்பாதை பணியில் 462 கி. மீ. தொலைவுக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இத்திட்டம் நிறைவேற மேலும் பல ஆண்டுகள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட தென் கோடிகளை இணைக்கும் வகையில் கிழக்குக் கடற்கரையோர ரயில்பாதையும், நீர்வழிப்போக்குவரத்தும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரயில் பாதைப் பணிகள் 45 சதவீதம் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீர் வழிப்போக்குவரத்து தொடங்குவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடற்கரையோர ரயில் போக்குவரத்தும், நீர் வழிப்போக்குவரத்தும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து மேம்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் திட்டங்களை நிறைவேற்றுவதில்தான் பல்வேறு காரணங்களால் சுணக்கம் நிலவி வருகிறது.
இத்திட்டத்தில் சென்னையிலிருந்து மொத்தம் 4 பிரிவாக பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பகுதிகளை மேம்படுத்துவது, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மேம்படுத்துவது, ஏற்கெனவே உள்ள பாதையோடு மேலும் இடையில் உள்ள இடைவெளியை புதிய தடம் மூலம் இணைப்பது, முற்றிலுமாக புதிய பாதை அமைப்பது என வகைப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை- செங்கல்பட்டு தூரம் 56 கி.மீ, பாதை செங்கல்பட்டில் தொடங்கி கடலூருக்கு முன் வரக்கால்பட்டு , அங்கிருந்து சிதம்பரம் வழியாக பேரளம் வரை தூரம் 100 கி.மீ, மேலும் காரைக்கால் - நாகப்பட்டினம் தூரம் 19 கி.மீ, மற்றும் இதர பாதைகளுடன் இணைக்கும் வகையில் செல்லும் ரயில்பாதை என மொத்தம் தூரம் 191 கி.மீ தொலைவு பாதை ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ( ரயில்கள் ஓடிக்கொண்டுள்ள) பகுதியாகும் . இப்பாதையை செங்கல்பட்டு - கடலூர் இடையிலான புதிய திட்டமாக அறிவிக்கப்பட்டு 2016-17 ஆண்டில் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் மேம்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர கிழக்குக் கடற்கரையோர ரயில்பாதைப் பணிகளின் இணைப்பு பணியாக, செங்கல்பட்டு மகாபலிபுரம் கல்பாக்கம், சதுரங்கப்பட்டிணம் செய்யூர், மரக்காணம், புதுச்சேரி, வரக்கால்பட்டு, வரையிலான புதிய பாதையின் திருத்தி அமைக்கப்பட்ட தூரம் 171 கி.மீ. இதற்கான திட்ட மதிப்பு ரூ. 1,200 கோடியாகும். மேலும் நடப்பு நிதியாண்டில் ரூ. 5 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைவுக்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. மேலும், திருத்துறைப்பூண்டி காரைக்குடி இடையேயான 122. கி.மீ தூர மேம்பாட்டு பணியில் காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான பகுதிகளில் அகலப்பாதையாக மேம்படுத்தும் பணியில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. ஆங்காங்கே புதிதாக ரயில் நிலையக் கட்டடங்களும் அமைக்கப்படுவதாலும், நிதி பற்றாக்குறை காரணமாகவும், இந்த மார்க்கத்தில் பணிகள் குறிப்பிட்ட காலத்தை விட தாமதமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட ரூ.240 கோடிநிதியில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து மொத்தம் 178 கி.மீ தூரத்திற்கு கடற்கரை பாதை திட்டம் விரைவில் நிறைவு பெறும்.
சென்னை-கன்னியாகுமரி இடையே உள்ள கடற்கரையோர ரயில்பாதையின் மொத்த தொலைவான 1002 கி. மீட்டரில் காரைக்குடியில் தொடங்கி, ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி , ஆறுமுகநேரி, காயல்பட்டிணம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கூடங்குளம் வழியாக நாகர்கோவில் வரையிலான 462.47 கி.மீ தொலைவு பாதை பணிகள் மட்டுமே முழுமையாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதில் சுமார் 54 சதவீதம் பயன்பாட்டில் உள்ள ரயில்பாதையாகும். இந்த கிழக்குக் கடற்கரையோர ரயில்பாதைப் பணிகள் முடிவடைந்து போக்குவரத்துகள் தொடங்கும் நிலையில், தென் மற்றும் கிழக்குக்கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை சென்று திரும்புவது எளிதாகும். மேலும் பல ஆயிரம் பேருக்கு இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள பகுதிகளும் பொருளாதாரப் போக்குவரத்தில் தன்னிலை பெறும். குமரி-சென்னை போக்குவரத்து தடையின்றி எளிதாக நடைபெற மாற்றுவழி ஏற்படுவதுடன் பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
கிடப்பில் உள்ள 462.47 கி.மீ தூரத்துக்கு 2008-09 நிதி ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே ரூ.1,965.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சென்னை- கன்னியாகுமரி கடற்கரையோர ரயில்பாதை திட்டம் ரயில்வேதுறையே நிறைவேற்ற வேண்டும்.தனியார் கூட்டுமுயற்சி நிறுவனங்கள் அமைக்கக்கூடாது. இதில், ஏற்கெனவே பல கி.மீ. தொலைவுக்கு ரயில்வே பாதை பயன்பாட்டில் உளளதால் இந்த திட்டப் பணிகளை ரயில்வே நிர்வாகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...