விரைவில் சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும்: ஓ.பன்னீர்செல்வம்
சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் வரை தர்ம யுத்தம் தொடரும் என்றார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.


நாகை: சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் வரை தர்ம யுத்தம் தொடரும் என்றார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
நாகை, அவுரித் திடலில் நடைபெற்ற அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
இப்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி சசிகலாவின் பினாமி ஆட்சி. அதிமுக தொண்டர்கள் 100-க்கு 100 சதவீதம் நம்முடைய பக்கம் தான் உள்ளனர். ஆனால், 122 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் ஆட்சியை நகர்த்தி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுக்கொண்டு அந்த நம்பிக்கையில் உள்ளனர்.
ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இந்த கட்சி சென்றுவிடக்கூடாது என்று எண்ணி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் கட்சியை கொண்டு செல்லவில்லை. அதைத்தான் நாம் கூறுகிறோம். ஆனால் நமது அடிப்படை கோரிக்கையை நிறைவேற்றாமல் இணைவோம் என்று ஒரு பொய்யை மெய்யாக கூறுகிறார்கள். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.
மக்கள் தான் எஜமானர்கள். நல்ல தீர்ப்பை அவர்கள் வழங்குவார்கள். இந்த கூட்டத்திற்கு எத்தனையோ தடையை விதித்தார்கள். அதையும் மீறி பெண்கள் திரண்டு வந்துள்ளனர். ஜெயலலிதா 74 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ. மூலம் உரிய நீதி விசாரணை நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
ஆனால் அதை இந்த பினாமி அரசு செய்ய முன்வரவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் இது மக்கள் புரட்சியாக வெடிக்கும். உங்கள் ஆட்சி வீட்டுக்கு போகும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களையும், எண்ணங்களையும் நிறைவேற்றும் அரசாக இல்லை. மாறாக, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட அரசாகவும், முடிவுகளை மேற்கொள்ள முடியாத அரசாகவும் தான் உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட நீதி விசாரணை, மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை வேண்டும், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பவை நமது அடிப்படை கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்ற ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. ஆனால், இணைவோம், இணைவோம் என பொய்யை மையாக்கி எழுதிக் கொண்டுள்ளார்கள் இப்போதைய ஆட்சியாளர்கள்.
தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்து விடும், தான் முதல்வராகி விடலாம் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கனவு காணுகிறார். காவிரி பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை உள்பட எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காணாத திமுக, நிச்சயமாக ஆட்சி வாய்ப்பைப் பெற முடியாது. அவரது முதல்வர் கனவை நாம் கண்டிப்பாக முறியடிப்போம். விரைவில் தேர்தல் வரும். அப்போது நமது வெற்றியின் மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...