மு.க.ஸ்டாலின் உள்பட 94 எம்.எல்.ஏ.க்கள் கைது
சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக்


சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 94 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆட்சி அமைப்பதற்காக பணப் பேரம் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை மு.க.ஸ்டாலின் பேரவையில் புதன்கிழமை எழுப்ப முயன்றார். அதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி தராததால் திமுகவினர் அமளியில் ஈடுட்டனர். அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவரின் உத்தரவின் பேரில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பேரவையில் இருந்து அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.
சாலை மறியல்: பேரவை வளாகத்தில் இருந்து பகல் 12 மணியளவில் வெளியில் வந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் ராஜாஜி சாலையில் சென்ற வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து ராமசாமி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்களும், முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கரும் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்து, சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொளுத்தும் வெயிலில் சுமார் 20 நிமிஷங்களுக்கு மேலாக பேரவைத் தலைவர் தனபாலைக் கண்டித்து எம்.எல்.ஏ.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: அதன் பிறகு மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது: ஆட்சி அமைப்புக்காக பணப் பேரம் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பேரவையில் நேரமில்லா நேரத்தில் கோரினேன். இந்த விவகாரம் குறித்து அதில் தொடர்புடைய இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதில் அளிக்க வேண்டும். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை பேரவைத் தலைவர் உடனே ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் பிரச்னையை எழுப்ப முயற்சித்தோம்.
ஆனால், நான் பேசுவதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டோம். நீதிமன்றத்தில் உள்ள விவகாரத்தை பேரவையில் பேச முடியாது என்பதை நானும் வாதத்துக்காக ஏற்கிறேன். ஆனால், காவிரி விவகாரம், முல்லைப் பெரியாறு, நீட் விவகாரங்கள் நீதிமன்றத்தில் இருக்கும்போதே அவையில் பேசப்பட்டுள்ளது. அதைக் குறிப்பிட்டும் அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை என்றார்.
மு.க.ஸ்டாலின் கைது: பின்னர், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் ராமசாமி உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 94 பேரை காவல்துறையினர் கைது செய்து ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், அனைவரும் பிற்பகல் 3 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு: திமுக எம்.எல்.ஏ.க்களின் சாலை மறியலால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வெளியில் இருந்து திமுக நிர்வாகிகள் யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் ராஜாஜி சாலையில் இருபக்கமும் தடுப்பு அரண்கள் அமைத்து வாகனங்கள் எதையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், அந்தப் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகினர். சென்னையில் 50 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 2,500 பேர் கைதாகினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
'பேரவையில் மீண்டும் எழுப்புவோம்'
ஆட்சி அமைப்புக்காக பணப் பேரம் நடைபெற்ற விவகாரத்தை சட்டப்பேரவையில் மீண்டும் எழுப்புவோம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:
சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றியதால், அதனைக் கண்டிக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டோம். பணப் பேர விவகாரம் தொடர்பாக பேரவையில் வியாழக்கிழமையும் நிச்சயம் குரல் கொடுப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...