110-ஆவது விதியின் கீழ் அறிவிப்புகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் விவாதம்

சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
110-ஆவது விதியின் கீழ் அறிவிப்புகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் விவாதம்
Updated on
2 min read

சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.
கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி பேசும்போது, 110-ஆவது விதியின் கீழ் கல்வித் துறைக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை என்றார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு கூறியது: 2011-12-இல் 110-ன் கீழ் 51 அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தார். அதில், 42 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. தற்போது 9 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
2012-13- இல் வெளியிடப்பட்ட 87-அறிவிப்புகளுக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டன. இதில் 65 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 22 திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
2013-14-இல் 292 அறிவிப்புகளில் 290-க்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2 அறிவிப்புகளுக்கான அரசாணைகள் நீதிமன்ற வழக்குகளால் வெளியிடப்படவில்லை. இதில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் 219. பணிகள் நடைபெறும் திட்டங்கள் 71 ஆகும்.
2014-15-இல் 236 அறிவிப்புகளில் 234-க்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களினால் 2 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்படவில்லை. 136 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. 98 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2015-16-இல் 213 அறிவிப்புகளில் 210 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களினால் 3 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்படவில்லை. 95 அறிவிப்புகளுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 115 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
மு.க.ஸ்டாலின்: 110-ஆவது விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முதல்வர் குறிப்பிட்டுப் பேசினார். அது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விவரங்களுடன் வெள்ளை அறிக்கையாக பேரவையில் வைத்தால் நிச்சயம் அதையும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி: 2011-லிருந்து 2016 வரை 110-ஆவது விதியின் கீழ் 879 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதில் 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 557 திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 315 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 7 அறிவிப்புகளுக்கான திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தினாலும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் இருக்கின்றன.
2016-17-ஆம் ஆண்டு, சட்டமன்ற விதி 110-ன் கீழ் 175 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 167 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 8 அறிவிப்புகளுக்கு திட்டப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. 20 அறிவிப்புகளுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 147 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. மொத்தம் 1054 அறிவிப்புகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
1,039 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 15 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டிய நிலை உள்ளது. 577 திட்டங்களுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 482 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள். அதற்கான விளக்கத்தைத் தருகிறோம் என்றார்.
மு.க.ஸ்டாலின்: அதற்காகத்தான் வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என எல்லாக் கட்சிகளும் வலியுறுத்துகின்றன.
துரைமுருகன்: வெள்ளை அறிக்கை வெளியிட்டால்தான் முழுமையான நிலவரம் எங்களுக்குத் தெரியும்.
எடப்பாடி பழனிசாமி: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். சாதித்துவிட முடியாது. இது சாதனை அரசு. அதனால்தான் புள்ளிவிவரத்தோடு சொல்கிறோம் என்று கூறி, அவர் வைத்திருந்த புள்ளிவிவரங்கள் அடங்கிய காகிதங்களைக் காட்டினார்.
மு.க.ஸ்டாலின்: திட்ட விவரங்கள் முழுவதும் உங்களிடம் இருக்கிறது. அதை எங்களிடம் தந்தால்தான் நாங்கள் கேள்வி கேட்க முடியும் என்றார்.
உடனே, எடப்பாடி பழனிசாமி அந்த புள்ளிவிவரங்களை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த ஸ்டாலின் மீண்டும் சில சந்தேகங்களை எழுப்புவதற்கு முயற்சித்தார். அதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி தரவில்லை. திமுகவினரும் அதற்குப் பிறகு அந்த விவகாரத்தை எழுப்பவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com