ஓபிஎஸ், தீபா பேரவை சார்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல்: அதிமுகவுக்கு உரிமை கோரும் விவகாரம்

அதிமுக தலைமைக்கு உரிமை கோரி ஒரே நாளில் தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணி, தீபா பேரவை ஆகியவற்றின் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு பிரமாண பத்திரங்கள்
தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தலைமை செய்தித் தொடர்பாளர் பசும்பொன்பாண்டியன்.
தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தலைமை செய்தித் தொடர்பாளர் பசும்பொன்பாண்டியன்.

அதிமுக தலைமைக்கு உரிமை கோரி ஒரே நாளில் தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணி, தீபா பேரவை ஆகியவற்றின் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு பிரமாண பத்திரங்கள் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
அதிமுக தலைமைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் அஇஅதிமுக என்ற கட்சிப் பெயரையும் அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தெரிவித்தது. இதையடுத்து, 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா' கட்சியைச் சேர்ந்த மதுசூதனன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ள அணி தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் கூறியது:
தேர்தல் ஆணையத்தில் எங்கள் அணி சார்பில் 3.5 லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 93 லட்சம் உறுப்பினர்களின் கையெழுத்து இடம் பெற்றுள்ளன. மேலும் 50 லட்சம் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய பிரமாண பத்திரங்களை வரும் நாள்களில் தாக்கல் செய்ய உள்ளோம். ஒபிஎஸ் தலைமையிலான அதிமுக அணியில் தொண்டர்களும், தலைவர்களும் இருப்பதால் எங்கள் அணியே உண்மையான அதிமுகவாகும். மக்களுடைய ஆதரவும் எங்களுக்கு உள்ளது என்றார் மைத்ரேயன்.
இதைத் தொடர்ந்து, கே.பி. முனுசாமி கூறுகையில், 'ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் போது அதிமுக சார்பாக கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனனும், மற்றொரு தரப்பில் டி.டி.வி. தினகரனும் போட்டியிட்டனர். இதையடுத்து, அதிமுக தேர்தல் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மேலும், இரு அணிகளாகப் பிரித்து சுயேச்சை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதையடுத்து, உண்மையான தொண்டர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதைத் தெரிவிக்கவே பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்து வருகிறோம். இதில் எந்த வகையிலும் தொடர்பில்லாத டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்வதாக அறிகிறோம். 'தீபா பேரவை' அதிமுகவின் சார்பு அமைப்பு அல்ல. அந்தப் பேரவையை வழிநடத்தும் தீபா, அதிமுகவை தன்வசம் ஒப்படைக்கக் கோருவது விளையாட்டுத்தனமாக உள்ளது என்றார்' என்றார்.
தீபா பேரவை: இதற்கிடையே, டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் அமைப்பாளர் தீபாவின் சார்பில், பேரவை தலைமை செய்தித் தொடர்பாளர் எஸ். பசும்பொன்பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவுக்கு உரிமை கோரி பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பின்னர் கூறுகையில், 'டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் 55 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளோம். மேலும் 50 முதல் 60 லட்சம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை கோரியுள்ளோம்' என்றார்.
அதிமுகவுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் மதுசூதனன் தரப்பும், சசிகலா தரப்பும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜூன் 16) வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது. எனவே, கடைசி நாளான வெள்ளிக்கிழமை சசிகலா அணி சார்பில் கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் என்று அதன் வழக்குரைஞர் ராகேஷ் சர்மா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com