
எந்த உணவு உண்ண வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த முடியாது என மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழகம், சுவாமி விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையம் சார்பில் 'சுவாமி விவேகானந்தரின் உயர் கல்விக் கொள்கையும் அதன் நோக்கமும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 15) நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கு முடிந்த பின் செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியது: யார் எந்த உணவை உண்ண வேண்டும் என்பதை எவராலும் திணிக்க முடியாது. குறிப்பாக அரசு இதைச் செய்ய முடியாது. மாட்டிறைச்சிக்கு தற்போது தடை விதிக்கப்பட்டு அதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது எனச் சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
எனக்குத் தெரிந்த வரை சுகாதார பாதுகாப்பின்படி, மிருகவதை தடுப்புப் பிரிவின் கீழ் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சந்தையில் மாடுகள் விற்கப்படுவதைத் தடுக்க வகை செய்கிறது. காரணம் இறைச்சிக்காக மாடு இப்படி விற்கப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆட்படுகிறது. குறிப்பாக, மாடுகள் வாகனத்தில் ஏற்றப்படும்போதும், இறைச்சிக்காக கொடூரமாகக் கொல்லப்படுவதும் எனப் பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறது. இதை தடுக்கத்தான் அந்த சுற்றறிக்கை.
மாட்டிறைச்சியை உண்பதற்கோ, அதனை ஏற்றுமதி செய்யவோ எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் சிலர் இதை தவறாக கருதி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஜனநாயக நாட்டில் ஒரு கருத்தை ஏற்பதும், எதிர்ப்பதும் மக்கள் விருப்பம் என்றார் இல கணேசன்.
முன்னதாக நடைபெற்ற கருத்தரங்கில் நீதிபதி கே.சந்துரு, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எஸ்.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.