அரசு இ-சேவை மையங்களில் மாற்று மின்னணு குடும்ப அட்டை பெறலாம்: தமிழக அரசு தகவல்

மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தாலோ அரசு இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் மாற்று அட்டை பெறலாம்
Published on
Updated on
1 min read

மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தாலோ அரசு இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் மாற்று அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தலைமைச் செயலகம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை பெருநகர மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்படும் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் மாற்று மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைக்கு பதிலாக புதிதாக மின்னணு குடும்ப அட்டையை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஏற்கெனவே பெறப்பட்ட மின்னணு தொலைந்து போயிருந்தாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்தாத நிலையில் இருந்தாலோ இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணம் செலுத்தி புதிதாக மாற்று மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு பழைய குடும்ப அட்டையில் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணைத் தெரிவிக்க வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்
(ஓடிபி) அனுப்பப்படும். அந்தக் கடவுச் சொல்லை பயன்படுத்தி புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும். பழைய குடும்ப அட்டையில் பதிவு செய்த செல்லிடப்பேசி எண் தெரியாதவர்களுக்கு இ-சேவை மையங்களில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க இயலாது.
புதிய மின்னணு குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை திருத்தங்கள் செய்யும் பணி மேற்கூறிய இ-சேவை மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல், குடும்ப அட்டையின் வகையை மாற்றம் செய்தல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விவரத்தை மாற்றம் செய்தல், குடும்பத் தலைவர் பெயரை மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைக்காக இ-சேவை மையங்களில் ரூ.60 செலுத்தி விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அந்த விண்ணப்பங்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் அளித்த பிறகு விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற பிறகு அருகே உள்ள இ-சேவை மையத்தை அணுகி திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை ரூ.30 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கூறிய இரண்டு சேவைகளும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) முதல் நடைமுறைக்கு வரும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டுமெனில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com