மாட்டிறைச்சி விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும்

மாட்டிறைச்சி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மாட்டிறைச்சி விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும்
Published on
Updated on
1 min read

மாட்டிறைச்சி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம்: தமிழகத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் கடந்த 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது.
சந்தைகளில் கால்நடைகளைச் சந்தைப்படுத்துதலை முறைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் மூலம் 2017 மே 23-இல் 1960-ஆம் ஆண்டைய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்கீழ், கால்நடைகள் சந்தைப்படுத்துதல் விதிகள் வெளியிடப்பட்டன.
விதிகள் விவரம்: இந்த விதிகள் மாட்டினங்களான பசு, எருது, எருமை, கன்றுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
சந்தைகளில் விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படக் கூடாது. வாங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என விதிகள் தெரிவிக்கின்றன.
மாநில எல்லைகளுக்கு 25 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மாட்டுச் சந்தைகள் செயல்படக் கூடாது எனவும் மாட்டைக் கொள்முதல் செய்தவர், அதனை மதம் சார்ந்த நிகழ்வுகளுக்காக பலியிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு: இந்த விதிகளைச் செயல்படுத்தத் தடையாணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மே 23-இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற அமர்வு, இவ்விதிகள் செயல்படுத்துவதற்கு நான்கு வாரத்துக்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது.
இந்த விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்துல் பகீம் குரேஷி என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கு ஜூலை 11-இல் விசாரணைக்கு வரவுள்ளது.
மத்திய அரசுக்கு கோரிக்கை: இந்த விதிகளால் விவசாயிகள் பலவிதங்களில் பாதிக்கப்படுவார்கள் என்றும், விதிகளில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து மத்திய அரசுக்கு வந்துள்ளது.
இதனால், விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் இது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்தத் தீர்ப்புக்குப் பின் உரிய நிலைப்பாட்டினை இந்த அரசு எடுக்கும்.
பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு செயல்படும். உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறதோ அதை அரசு நடைமுறைப்படுத்தும் எனவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com