கோவையில் முன்னாள் நீதிபதி கர்ணன் தங்கி இருந்தது அவரது சொந்த வீடுதான்: விசாரணையில் தகவல்
கோவை அருகே முன்னாள் நீதிபதி கர்ணன் தலைமறைவாகத் தங்கி இருந்தது அவருடைய சொந்த வீடுதான் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


கோவை அருகே முன்னாள் நீதிபதி கர்ணன் தலைமறைவாகத் தங்கி இருந்தது அவருடைய சொந்த வீடுதான் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கோவையில் தலைமறைவாகத் தங்கி இருந்த போது மேற்கு வங்க மாநில போலீஸாரால் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அவரை தனிப்படையினர் நாடு முழுவதும் தேடி வந்த நிலையில், அவர் கோவையில் கைது செய்யப்பட்டது பல்வேறு தரப்பினரிடையை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கர்ணன் கடந்த 15 நாள்களுக்கு முன்னரே கோவைக்கு வந்து நான்கு நாள்கள் தங்கிச் சென்றுள்ளார்.
மேலும், கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் இரண்டாவது தடவையாக மாச்சேகவுண்டன்பாளையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த வீட்டை அவருடைய மகன் கமல்நாத்துக்காக கர்ணன் கட்டிவந்துள்ளார்.
இந்த வீட்டில் மின் விசிறி, கட்டில் ஆகியவை மட்டுமே இருந்துள்ளன. தொலைக்காட்சி, செல்லிடப்பேசி போன்ற எந்த விதமான தகவல் தொடர்பு சாதனமும் இல்லை. அந்த வீட்டில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட சில தொழிலாளர்கள் அவருக்குத் தேவையான உணவு வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட உதவிகளைச் செய்து வந்தனர்.
கர்ணன் சிக்கியது எப்படி?
முன்னாள் நீதிபதி கர்ணன், மாச்சேகவுண்டன்பாளையத்தில் தங்கி இருப்பது அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே தெரியும்.
இந்த நிலையில், கோவையில் உள்ள கர்ணனின் உறவினர் ஒருவர் அவரை அடிக்கடி பார்த்து வந்துள்ளார். அப்போது அவரது செல்லிடப்பேசியில் இருந்து தனது மகன் கமல்நாத்துடன் பேசியுள்ளார். இந்தப் பதிவை வைத்தே மேற்கு வங்க போலீஸார் கர்ணனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநில உளவுத்துறை ஐ.ஜி. ராஜ் கனோஜியா, காவல் கண்காணிப்பாளர்கள் சுதாகர், செல்வமுருகன் ஆகியோர் புதன்கிழமை கோவை வந்துள்ளனர். அவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது கர்ணனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு உதவி கேட்டனர். உஷாரான மாநகர காவல் துறையினர் சைபர் கிரைம் உதவியுடன் அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளனர்.
அதன் பிறகு கோவை மாநகர காவல் துறை ஆய்வாளர் சந்திரசேகர் , உதவி ஆய்வாளர் சாஸ்தா ஆகியோருடன் மேற்கு வங்க மாநில போலீஸார் புதன்கிழமை மாலை 7 மணியளவில் கர்ணன் தங்கி இருந்த வீட்டுக்குச் சென்றனர் .
முதலில் உள்ள சென்ற சந்திரசேகர், சாஸ்தா ஆகியோர் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், கர்ணன் வீட்டினுள் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் கர்ணனிடம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேற்கு வங்க போலீஸார் கைது செய்ய வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது கர்ணன் "கைது வாரண்டு உள்ளதா?' என்று கேட்டுள்ளனர்.
பின்னர் உள்ளே சென்ற காவல் கண்காணிப்பாளர்கள் சுதாகர், செல்வ முருகன் ஆகியோர், கைது வாரண்டை கர்ணனிடம் காண்பித்துள்ளனர்.
முதலில் அவர்களுடன் வர மறுத்த கர்ணன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அதன் பிறகு விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று போலீஸார் உறுதியளித்து, அவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...