ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றால் பழனிசாமி மாற்றப்படுவார்: ஓபிஎஸ் அதிரடி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியிலிருந்து பழனிசாமி மாற்றப்படுவார் என்று அதிமுக


சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியிலிருந்து பழனிசாமி மாற்றப்படுவார் என்று அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
குடும்ப அரசியல் கூடாது என்பதே ஜெயலலிதாவின் எண்ணம். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதை ஜெயலலிதா உறுதியாக கடைபிடித்தார்.
அவர் மறைந்தபோது தமிழக முதல்வராகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் மூத்த அமைச்சர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால் முதல்வரானேன்.
அதன்பின்னர், சசிகலா தான் கட்சியின் பொதுச் செயலாளராக வேண்டும் என்று எங்களை நிர்பந்தித்தார். கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலேயே அவரை முன்நிறுத்தினோம்.
பொதுச்செயலர் ஆனதும், தானே முதல்வராக வேண்டும் என்று சசிகலா ஆசைப்பட்டார். அதனாலேயே பிரச்சினை ஏற்பட்டது.
சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதாலேயே அதிமுகவில் பிரச்சினை வெடித்தது. அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று மூத்த நிர்வாகிகள் மற்றும் சில அமைச்சர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இதன் காரணமாகவே அம்மா சமாதியில் எனது மனக்குமுறல்களை கொட்டினேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து என்னிடம் யாரும் விளக்கியது இல்லை. வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று தம்பிதுரையிடம் கேட்டேன். ஆனால் எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் தமிழக மக்கள் மனதில் ஆறாத சந்தேகங்கள் பதிந்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலகும் வரை தர்மயுத்தம் ஓயாது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுவோம் என்றார்.
நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து டி.டி.வி தினகரன், மக்களை ஏமாற்ற பார்க்கிறார். பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் கைதாகியுள்ள சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.அரசியல் லாபத்திற்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார்
சசிகலா குடும்பம் எனக்கு அளித்த அழுத்தங்களை 10 சதவீதம்தான் கூறியுள்ளேன். 90 சதவீதத்தை எனக்குள்ளே புதைத்துக் கொண்டேன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுவோம் என்று கூறிய பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் பழனிசாமி மாற்றப்படுவார். பழனிசாமி எங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...