சேகர் ரெட்டியின் குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் ஆகியோரின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பியுள்ள வருமானவரித்துறை அக்குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்காணிப்புப் பிரிவைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கண்காணிப்பு ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பவர் கிரிஜா வைத்தியநாதன் தான் என்பதால், அவர் தான் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் உதவியாளர்கள் மீதான குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஆனால், வருமானவரித்துறையிடமிருந்து கடிதம் வந்து பல நாட்கள் ஆகியும் எந்த விசாரணைக்கு ஆணையிடப்படாதது ஐயங்களை ஏற்படுத்துகிறது.