சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கியோர் பட்டியலை வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின், ராமதாஸ்

சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கியோர் பட்டியலை வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின், ராமதாஸ்

தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர்

தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களில் இருந்து, வருமான வரித் துறையினர் கைப்பற்றிய குறிப்பேடுகளில், மணல் கொள்ளை விவகாரங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெற்ற ரூ.300 கோடி ஊழல் பற்றி விரிவான தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை வருமான வரித் துறையே தலைமைச் செயலாளருக்கு அனுப்பி, ஊழல் குறித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறது.
அதிமுகவின் இரு அணிகளும் ஊழலில் எந்தளவுக்கு மூழ்கிக் கிடக்கின்றன என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீதும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் வெளிவந்துள்ள முதல்வர் விரிவான காப்பீட்டுத் திட்ட ஊழல்கள் குறித்து உடனடி விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
நேர்மையானவர் என்று பெயர் பெற்றிருக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, ஊழல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தலைமைச் செயலாளருக்கு உள்ள அதிகாரத்தைச் சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும்.
ராமதாஸ்: தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருப்பதாகவும் இதுகுறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரிடமிருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கைநீட்டி பணம் வாங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கையூட்டாகக் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிகவும் நேர்மையான அதிகாரி. சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com