நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்டு வந்த அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, நீட் தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதன்படி முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக, அத்தேர்வை நடத்தும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) விதித்திருந்த கட்டுப்பாடுகள் அர்த்தமற்றவை; அபத்தமானவை. முழுக்கை சட்டை போட்டிருப்பவர்கள் கைகளில் விடைகளை எழுதி வைத்திருப்பார்கள் என்றோ, தூண்டுச்சீட்டுகளை மடிக்கப்பட்ட முழுக்கை சட்டைக்குள் பதுக்கி வைத்திருப்பார்கள் என்றோ தேர்வு அதிகாரிகள் நினைத்தால் மாணவர்களையும், சட்டையையும் சோதனை செய்து உள்ளே அனுப்பியிருக்கலாம். மாறாக, முழுக்கை சட்டையை கிழித்து அரைக்கை சட்டையாக மாற்றி அனுப்புவதும், மாணவிகளின் முக்கால் கை குர்தாவை பாதியாக கிழித்து அனுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களாகும். சுயமாக சிந்திக்கும் திறனற்ற, எந்திரத் தனமான சிந்தனை கொண்ட அதிகாரிகளால் மட்டுமே இத்தகைய அபத்தங்களை அரங்கேற்ற முடியும்.