பிளஸ் 2 தேர்வு: 92.1% தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 9.33 லட்சம் மாணவர்களில் மொத்தம் 92.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் செல்லிடப்பேசி மூலம் ஆர்வத்துடன் பார்க்கும் மாணவிகள்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் செல்லிடப்பேசி மூலம் ஆர்வத்துடன் பார்க்கும் மாணவிகள்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 9.33 லட்சம் மாணவர்களில் மொத்தம் 92.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4,77,930 மாணவியர், 4,15,331 மாணவர்கள் என பள்ளி மூலம் விண்ணப்பித்த 8 லட்சத்து 93,261 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதினர்.
இதுவரை இல்லாத அளவுக்கு 94.5 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு 94.4 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 89.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் 5.2 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1,813 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி: இந்த ஆண்டு 6,732 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 1,813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
2,640 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 292 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
விருதுநகர் முதலிடம்: பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், விருதுநகர் 97.85 சதவீதத் தேர்ச்சி பெற்று மாவட்டங்களில் முதலிடம் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் 86.84 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடம் பெற்றுள்ளது.
200-க்கு 200 எத்தனை பேர்? இந்த ஆண்டு (2017) பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் யாரும் 200-க்கு 200 பெறவில்லை.
பிற பாடங்களைப் பொருத்தவரை அதிகபட்சமாக வணிகவியல் பாடத்தில் 8,301 பேரும், குறைந்தபட்சமாக விலங்கியல் பாடத்தில் 4 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கணிதப் புலிகள் அதிகரிப்பு: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பி.இ. படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடமான கணிதத்தில் 3,656 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர்; கணிதத்தில் கடந்த ஆண்டு 3,361 மாணவர்கள் 200-க்கு 200 பெற்றனர்.
இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு 187 பேரும், கடந்த ஆண்டு 5 மாணவர்களும் 200-க்கு 200 பெற்றனர்.
எனினும் வேதியியல் பாடத்தில் இந்த ஆண்டு 1,123 பேர் மட்டுமே 200-க்கு 200 பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 1,703 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது.
700 மதிப்பெண்ணுக்குக் கீழ் 2.80 லட்சம் பேர்: பள்ளிகள் மூலம் பிளஸ் 2 தேர்வு எழுதிய 8.93 லட்சம் மாணவர்களில், 2 லட்சத்து 80 ஆயிரத்து 938 மாணவர்கள் 1,200-க்கு 700 மற்றும் அதற்குக் கீழ் மதிப்பெண் (58 சதவீத மதிப்பெண்) பெற்றுள்ளனர்.
எனினும் 1,180 மதிப்பெண்ணுக்கு மேல் 1,171 பேர்; 1,151 முதல் 1,180 மதிப்பெண் வரை 12,283 பேர்; 1,126 முதல் 1,150 மதிப்பெண் வரை 14,806 பேர்; 1,101 முதல்
1,125 மதிப்பெண் வரை 17,750 பேர்; 1,001 முதல் 1,100 மதிப்பெண் வரை 95,906 பேர், 901 முதல் 1,000 மதிப்பெண் வரை 1,36,849 பேர் பெற்றுள்ளனர்.
திருநங்கை மாணவி: பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கையான சென்னை அம்பத்தூர் தாகிரா பானு 537 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
ரேங்க் முறை ரத்து: தமிழகத்தில் 1979-ஆம் ஆண்டு பிளஸ் 2 பாடத் திட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் இந்த ஆண்டு முதல் முறையாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்களை அறிவிக்காமல், அனைத்து மாணவர்களையும் சமமாகக் கருதும் வகையில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது.
மாணவர்களுக்குச் சான்றிதழ்:
ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டாலும்கூட, மாநில, மாவட்ட அளவில் பாடவாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகவியலில் 8,301 பேர் சதம் விலங்கியலில் 4 பேர்

பிளஸ் 2 தேர்வில் வணிகவியல் பாடத்தில் 8 ஆயிரத்து 301 பேர் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர்.
பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்:
வணிகவியல் 8,301
கணக்குப்பதிவியல் 5,597
கணிதம் 3,656
வணிகக் கணிதம் 2,551
பொருளாதாரம் 1,717
கணினி அறிவியல் 1,647
வேதியியல் 1,123
உயிரியல் 221
வரலாறு 336
இயற்பியல் 187
புள்ளியியல் 68
தாவரவியல் 22
நுண் உயிரியல் 5
விலங்கியல் 4

மொழிப் பாடங்களில் ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் எந்தவொரு மாணவரும் 200-க்கு 200 மதிப்பெண் பெறவில்லை.
வணிகவியல் பாடத்தில் அதிகபட்சமாக 8,301 மாணவர்களும், குறைந்தபட்சமாக விலங்கியல் பாடத்தில் 4 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் கடந்த ஆண்டை (2016) போலவே யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை. இந்தப் பாடங்களில் கடந்த 2015-இல் 229 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1,180 மதிப்பெண்ணுக்கு மேல் 1,171 மாணவர்கள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 1,171 மாணவர்கள் 1,200-க்கு 1,180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம்:

மதிப்பெண்கள் மாணவர்களின் எண்ணிக்கை

1,180-க்கு மேல் 1,171
1,151- 1,180 12,283
1,126- 1,150 14,806
1,101- 1,125 17,750
1,001- 1,100 95,906
901- 1,000 1,36,849
801- 900 1,64,489
701- 800 1,69,070
700- அதற்கும் கீழ் 2,80,938
மொத்தம் 8,93,262

292 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி

தமிழகத்தில் 2,586 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன; இதில் 292 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. விருதுநகர்-28, ஈரோடு-23, ராமநாதபுரம்-23, நாமக்கல்-16, தூத்துக்குடி-16, சிவகங்கை-15, தேனி-14, திருநெல்வேலி-14, சேலம்-14, திருச்சி-14, கரூர்-13, கோவை-13, கன்னியாகுமரி-12, திருப்பூர்-11, மதுரை-9, புதுக்கோட்டை-9, தஞ்சாவூர்-7, தருமபுரி-7, திருவண்ணாமலை-7, விழுப்புரம்-4, திண்டுக்கல்-4, நீலகிரி-6, கிருஷ்ணகிரி-2, அரியலூர்-2, பெரம்பலூர்-2, திருவாரூர்-2, வேலூர்-3, நாகப்பட்டினம்-1, கடலூர்-1 என மொத்தம் 292 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளன.
அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 95.97 சதவீதம் பெற்று முதலிடமும், ராமநாதபுரம் 95.39 சதவீதம் பெற்று 2-ஆவது இடமும் ஈரோடு 94.75 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள எந்தவொரு அரசுப் பள்ளியும் 100 சதவீத தேர்ச்சியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மே 15 முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

சென்னை, மே 12: பிளஸ் 2 தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை திங்கள்கிழமை (மே 15) முதல் பெறலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்வித்துறையின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் பிறந்த தேதி, பதிவெண்ணை அளித்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
17-இல் பள்ளிகளிலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டல்- விடைத்தாள் நகல்: மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வெள்ளிக்கிழமை (மே 12) முதல் மே 15-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ.305, ஏனைய பாடங்களுக்கு ரூ.205 பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற பகுதி- 1 மொழிப் பாடத்துக்கு ரூ.550, பகுதி -2 மொழிப் பாடத்துக்கு ரூ.550, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275 செலுத்த வேண்டும்.


முதலிடத்தில் விருதுநகர்; கடைசியில் கடலூர்

சென்னை, மே 12: பிளஸ் 2 பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் தேர்ச்சியுடன் முதலிடத்தையும் கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத் தேர்ச்சியுடன் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
மாவட்ட வாரியாக
தேர்ச்சி விகிதம்:
விருதுநகர் 97.85
ராமநாதபுரம் 96.77
ஈரோடு 96.69
தூத்துக்குடி 96.44
நாமக்கல் 96.40
சிவகங்கை 96.18
திருநெல்வேலி 96.08
திருப்பூர் 96.05
தேனி 95.93
கோவை 95.83
கன்னியாகுமரி 95.75
திருச்சி 95.50
கரூர் 94.96
மதுரை 93.61
பெரம்பலூர் 93.54
சென்னை 92.99
சேலம் 92.89
திண்டுக்கல் 92.80
தஞ்சாவூர் 92.47
தர்மபுரி 92.23
புதுக்கோட்டை 92.16
நீலகிரி 92.06
திருவண்ணாமலை 91.84
காஞ்சிபுரம் 88.85
திருவாரூர் 88.77
அரியலூர் 88.48
நாகப்பட்டினம் 88.08
கிருஷ்ணகிரி 88.02
திருவள்ளூர் 87.57
விழுப்புரம் 86.36
வேலூர் 84.99
கடலூர் 84.86

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com