

40 சதவீத குப்பைகளைக் குப்பை மேட்டுக்கு அனுப்பாமல் தடுத்து, பயோகேஸ் தயாரிக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் நகராட்சிகள், மாநகராட்சிகளில் குப்பை மலைகளின் வளர்ச்சி தடுக்கப்படுவதோடு, திடக்கழிவு மேலாண்மையில் இப்போது உள்ள சவால்கள் குறையும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் குவியும் குப்பைகளின் அளவு 14,000 மெட்ரிக் டன். ஒன்றுக்கும் உதவாத, யாருக்கும் பிரச்னையில்லாத குப்பைகளாக மட்டுமேயிருந்து அப்படியே மக்கி மண்ணோடு மண்ணாகிப் போனால் யாருக்கும் பிரச்னை இல்லை. ஆனால், இந்தக் குப்பைகள் நோய் உற்பத்திக் கூடங்களாக மாறி மக்களின் வாழ்க்கைச் சூழலைச் சிதைத்து விடுகின்றன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்கள் குப்பை கொட்டுவதில் போட்டி போடுகின்றன. சென்னையில் 1991-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தினமும் கொட்டப்படும் குப்பைகளின் அளவு 600 டன். ஆனால், இப்போது தினமும் 5,000 டன்.
குப்பைகளின் வகைகள்: குப்பைகளில் உணவு, மருத்துவம், எலக்ட்ரானிக், அணு, கட்டடம், தொழிற்சாலைக் கழிவுகள் என பல வகைகள் உள்ளன. இவற்றை மொத்தமாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் மக்கும் குப்பைகளின் அளவு 60 சதவீதம். மக்காத குப்பைகளின் அளவு 35 சதவீதம், மற்றவை 5 சதவீதம் தான்.
இதில் மக்கும் குப்பைகள் என்பது உணவுக் கழிவுகள், பேப்பர், மக்கும் பிளாஸ்டிக், இறைச்சி ஆகியவை. மக்காத குப்பைகள் என்பது பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி, உலோகங்கள் மற்றும் வேதிப்பொருள்கள்.
மீத்தேன் வாயுவை உருவாக்கும் குப்பை மேடுகள்: மக்கும் குப்பைகளைக் கொட்டிக் கொட்டிக் குவித்து வைப்பதால் நாள்பட அது மீத்தேன் வாயுவை உண்டாக்கும். இது எரியக்கூடியது, குப்பைமேடுகளில் எப்போதும் புகை வந்து கொண்டிருப்பதும் இதனால்தான். காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ûஸடு இதை முழுமையாக எரியவிடாமல் தடுக்கும். இதனால்தான் இது எப்போதும் புகைந்துகொண்டேயிருக்கிறது. இது குப்பைகளில் கலந்துள்ள பிளாஸ்டிக், ரப்பர் முதலான மக்காத குப்பைகளோடு சேர்ந்து எரிவதால், பல பாதிப்புகளை உண்டாக்கும்.
தொற்று நோய்களை உண்டாக்கும்: மக்கும் குப்பைகளில் உண்டாகும் கிருமிகளால் தொற்றுநோய்களும், சுகாதாரக் கேடும் உண்டாகும். அதுபோக கொசுக்கள் இனப் பெருக்கத்துக்கும் வழிவகுக்கும். மீத்தேன் வாயுவைத் தொடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் தொடங்கி புற்றுநோய்கூட உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் குப்பைகளால் உண்டாகும் டயாக்ஸின் என்னும் வாயு காற்றின் மூலக்கூறுகளில் பரவி பல ஆயிரம் கி.மீ. பயணிக்கும் திறன் கொண்டவை. இதுதான் புற்றுநோய் உண்டாக முக்கியக் காரணமாகவும் உள்ளன.
இந்தக் குப்பைகளால் உண்டாகும் டயாக்ஸின் மாதிரியான கொடிய நச்சுப்புகைதான், இன்றைக்குக் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் கூட புற்றுநோய் உண்டாகக் காரணம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேல் குப்பை கொட்டப்படும் பகுதியின் அருகே குடியிருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கருச்சிதைவு, ஆண்மைக் குறைவு, சுவாசக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
வெற்றிபெறாத திடக்கழிவு மேலாண்மை: வீடுகளிலேயே எருக்குழிகள் அமைத்து, 50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இயல்பிலேயே திடக் கழிவு மேலாண்மையைக் கையாண்ட நம்மால் இப்போது, அதைப் பின்பற்ற முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் ஒருவர் கொட்டுகிற குப்பையின் அளவு 200-600 கிராம்.
தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலும் குப்பைகளை மொத்தமாகச் சேகரித்து, அதைக் கட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் காலி இடங்களில் கொட்டி நிரப்பப்படுகிறது. குப்பைகள் அதிகரிக்க அதிகரிக்க புதிதாக இடம் பார்த்து அந்த இடத்தில் கொட்டுவதும் தொடர்கிறது. சென்னையில் மட்டும் 10 இடங்களில் குப்பைகள் டன் கணக்கில் மலைபோல குவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுக்க மக்களால் கொட்டப்படும் குப்பைகளில் 80 சதவீதம் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளால் அள்ள முடிகிறது. மீதியெல்லாம் சாலைகளிலும் தெருவோரங்களிலும், கழிவு நீர்க் கால்வாய்களிலும் நிரம்பிக் கிடக்கின்றன.
அரசு குப்பை மேலாண்மைக்காக டன்னுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை செலவு செய்கிறது. ஆனால், இத்தொகையில் 70 சதவீதம் குப்பைகளை உரிய இடங்களிலிருந்து அள்ளுவதற்கும், 20 சதவீதம் அதை எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்கும், 10 சதவீதம் தான் அதைக் கையாளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த 10 சதவீதத்தை வைத்துதான் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து, மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும், மக்கும் குப்பையை எருவாக்குவதற்கும் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
40 சதவீதம் குப்பைகளை குப்பை மேடுகளுக்கு அனுப்பாமல் தடுக்கும் புதிய திட்டம்:
குப்பைகளைச் சரியான வழியில் பயன்படுத்தினால் நம்மால் நிறைய சம்பாதிக்கவும் நம்முடைய அன்றாடத் தேவைகளுக்கும் உபயோகிக்க முடியும், அதற்காக கொஞ்சம் உழைப்பும், பொறுமையும் அவசியம், குப்பைகளைக் கொண்டு பலருக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கலாம், நம் மின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம், பயோகேஸ் தயாரிக்கலாம், எரிபொருளாகவும் பயன்படுத்தலாம் என பல ஆண்டுகளாகக் கூறி வந்தாலும், இதனை யாரும் பின்பற்றுவதில்லை.
குப்பை மேட்டில் அவற்றைத் தரம் பிரித்து எரு தயாரிப்பு, பிளாஸ்டிக் கூழ் தயாரிப்பு என முயற்சி மேற்கொண்டாலும், எதிர்பார்த்ததில் 10 சதவீதப் பலனைக் கூட இது தருவதில்லை. இதனால் குப்பைகளை உற்பத்தி செய்பவரே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் அந்த குப்பைகளை அழித்துவிடுவது என்ற முயற்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதன்படி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் சேரும் உணவு, காய்கறி, தாவரக் கழிவுகளை குப்பை மேட்டுக்கு அனுப்பாமல் அங்கேயே சாண எரிவாயு அமைப்பு போன்று, பயோகேஸ் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தேர்வு செய்யப்பட்ட சில நகராட்சிகளில் தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் நாமக்கல் நகராட்சியில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியது: நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் 40 சதவீதம் கழிவுகள் ஹோட்டல்கள், திருமண மண்டங்களில் இருந்துதான் குப்பை மேடுகளுக்குச் செல்கிறது என்பது பல்வேறு கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனை இன்னும் 3 ஆண்டுகளில் முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் பயோகேஸ் பிளாண்ட் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முன்னோடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகராட்சிகளில் நிகழாண்டிலேயே இந்த பிளாண்ட் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் முன் நகராட்சிக் குப்பை லாரிகள் நிற்காது. இதன் மூலம் குப்பை சேருவது குறையும், நகராட்சியின் செலவினமும் குறைவதோடு, பிற குப்பைகளை மேலாண்மை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஓரளவு குறையும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.