நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வங்கி அதிகாரி வீட்டில் 90 சவரன் நகைகளைத் திருடிய  பொறியியல் மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

புதுச்சேரியில் வங்கி அதிகாரி வீட்டில் 90 சவரன் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :30 மே 2017, 10:46 am

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் வங்கி அதிகாரி வீட்டில் 90 சவரன் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயசீலன். இவர் கனரா வங்கியில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 27-ம் தேதி இவரது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த 90 பவுன் நகைகள் காணாமல் போனது.

இதுகுறித்து ஜெய சீலன் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் எஸ்பி ரச்சனா சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர் தனசேகரன், எஸ்.ஐக்கள் சிவப்பிரகாசம், தயாளன், சண்முகசத்தியா மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வீட்டின் கதவு உடைக்கப்படாமல் அலமாரி உடைக்கப்படாமல் நகை திருடு போயிருந்ததால் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் தான் நகையை திருடி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்தனர்.

அதன்படி ஜெயசீலனின் மகன் தீபக்கின் நண்பர்கள் யார்? யார் வீட்டிற்கு அதிகமாக வந்து செல்கின்றனர் என விசாரித்தனர். அப்போது தீபக்கின் நண்பர் லாஸ்பேட்டை நாவற்குளம் அன்னை வேளாங்கண்ணி தெருவைச் சேர்ந்த திலிப்குமார் (19) மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களோடு சேர்ந்து நகைகளைத் திருடியது தெரிய வந்தது.

மேலும் அந்நகைகளை அடகு வைத்து கோவா, ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று வந்ததும் தெரிந்தது. புதுவை மூலக்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் 2-ம் ஆண்டு படிக்கும் தீபக்கும், திலிப்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் தன் வீட்டில் உள்ள நகைகளை காட்டி தீபக் பெருமையாக பேசியுள்ளார்.

திலிப்குமார் அடிக்கடி வரும் போதெல்லாம் யாரும் கவனிக்காதபோது அலமாரியை திறந்து சிறிய நகை களை திருடி சென்றுள்ளார். இதனை யாரும் கவனிக்கவில்லை. மேலும் தீபக்கின் வீட்டில் சாவியை மறைவிடத்தில் வைத்து விட்டுச் செல்வது வழக்கம். அதை திலிப்குமாரும் அறிவார்.

அதைப் பயன்படுத்தி கடந்த 27-ம் தேதி யாரும் இல்லாத போது 90 சவரன் நகைகளை திலிப்குமார் திருடிச் சென்றுள்ளார். இந்த நகைகளை அவருடன் கல்லூரியில் பயிலும் நெல்லித்தோப்பு காராமணிக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விக்கி (21), ரெயின்போ நகர் 3-வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (20), உழவர்கரை தியாகராஜ பிள்ளை நகர் அஜய் (22), வைத்திகுப்பம் பச்சைவாழியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராம்ஜி (22) ஆகியோருடன் சேர்ந்து நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து லாஸ்பேட்டை போலீஸார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகள், ரூ.2.25 லட்சம் ரொக்கம், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சீனியர் எஸ்.பி. ராஜிவ் ரஞ்சன் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட எதிரிகளில்  விக்கி 35 சவரன் நகைகளை பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். அவர் ஏற்கெனவே லாஸ்பேட்டையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர். திலிப்குமாரின் தந்தையும், மாமாவும் அடகு வியாபாரிகள். அவர்களிடம் திருடிய நகைகளை அடகு வைத்துள்ளனர். அவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். விரைவில் மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்வோம் என்றார்.

சிறுவர்கள், மாணவர்கள் வந்து நகைகளை அடகு வைக்க வந்தால் நிதி நிறுவனங்கள் அவற்றை ஏற்கக்கூடாது என்றார் ராஜிவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.